உ.பி. மாநிலத்தில் நடைபெற்று வரும் கும்பமேளா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரும் நபர்கள் குறித்து ஒவ்வொரு நாளும் பல்வேறு சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி வருகிறது.

அந்த வகையில், ப்ரயாக்ராஜ் நகரில் புனித நீராடி தனது பாவத்தை தொலைக்க வந்த சாராய வியாபாரி ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் நகரைச் சேர்ந்த பர்வேஸ் யாதவ் என்ற நபர் கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதம் பீகார் மாநிலத்துக்கு கள்ளச்சாராயம் கடத்திய வழக்கில் உ.பி. மாநிலத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

2023ம் ஆண்டு ஜூலை 19ம் தேதி படோதி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலை 19ல் காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையின் போது கள்ளச்சாராயம் ஏற்றி வந்த வாகனத்தை மடக்கிப் பிடித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இதில் தொடர்புடைய பர்வேஸ் யாதவ் காவல்துறையினரிடம் சிக்காமல் தப்பி ஓடினார்.

இந்த நிலையில் கும்பமேளா நிகழ்ச்சியை தீவிரமாக கண்காணித்து வந்த காவல்துறையினரிடம் புனித நீராட வந்த பர்வேஸ் யாதவ் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.