லக்னோ: இந்தியா முழுவதும் இந்தி மொழி குறித்த அமித்ஷாவின் பேச்சு மீண்டும் விவாதப்பொருளாகி மாறி வரும் நிலையில், இந்தியாவில் வாழ விரும்புவோர் ஹிந்தியை நேசிக்க வேண்டும், இந்தியை நேசிக்காதவர்கள் வெளிநாட்டினர் என்று சர்ச்சைக்குறிய வகையில் பேசியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

ஏப்ரல் 8ந்தேதி அன்று  நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37ஆவது கூட்டத்துக்குத் தலைமை வகித்துப் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆங்கில மொழிக்கு மாற்றாக இந்தி மொழியே இருக்க வேண்டும் என்றும், இந்தி உள்ளூர் மொழிகளுக்கு மாற்று அல்ல என்று விளக்கினார்.

அமித்ஷாவின் பேச்சு சர்ச்சையானது. தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்த மொழிப்பிரச்சனை தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும், கன்னட மொழி திரைப்படமான ‘கே.ஜி.எஃப்2’ பான் இந்தியா திரைப்படமாக இந்தியா முழுவதும் வெளியாகி வெற்றிபெற்று உலகம் முழுவதும் 500 கோடிக்கும் அதிகமான வசூல் பெற்றதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த படத்தின் வெற்றி விழாவில் கலந்துகொண்டு பேசிய  கன்னட நடிகர் சுதீப், ‘பான் இந்தியா படம் கன்னடத்தில் தயாரிக்கப்பட்டதாக சொன்னீர்கள். ஒரு திருத்தம். இந்தி தேசிய மொழி கிடையாது. பாலிவுட்டிலும் பான் – இந்தியா திரைப்படங்களை தயாரிக்கிறார்கள். அவர்கள் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மற்ற மொழிகளில் வெற்றியை பெற போராடுகிறார்கள். ஆனால் நாங்கள் எங்கும் வெற்றி பெறுகிறோம்” என பேசி இருந்தார்.

சுதீப்பின் பேச்சுக்கு பதில் அளித்து டிவிட் பதிவிட்ட  இந்தி நடிகர் அஜய் தேவ்கன், இந்தி தான் நமது தேசிய மொழி. உங்கள் கருத்துப்படி இந்தி மொழி தேசிய மொழி இல்லை என்றால் ஏன் கன்னட படங்களை டப் செய்து இந்தியில் ஏன் வெளியிடுகிறீர்கள் என ஹிந்தியில் கிச்சா சுதீப்பிடம் கேள்வி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள கிச்சா சுதீப், “நீங்கள் இந்தியில் அனுப்பிய பதிவு எனக்கு புரிந்தது. நாம் அனைவரும் இந்தி மொழியை நேசித்து கற்றுக்கொள்வோம். குற்றமில்லை சார். ஆனால் உங்கள் கேள்விக்கு எனது பதிலை கன்னட மொழியில் பதிவு செய்திருந்தால் நிலைமை என்னவாகும் என்று யோசித்தேன். நாங்களும் இந்தியாவை சேர்ந்தவர்கள் அல்லவா” குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் சுதீப்புக்கு ஆதரவாக எச்.டி.குமாரசாமி, காங்கிரஸ் தலைவர் சித்தராமையா உள்பட குரல் கொடுக்க இந்த விவகாரம் சர்ச்சையானது.

இந்த நிலையில்,  உ.பி., அமைச்சர் சஞ்சய் நிஷாத், ஹிந்தியை காதலிக்காதவர்களை, ‘வெளிநாட்டினர்’ என அழைக்கப்படுவார்கள் என்றும், இந்தியாவில் வாழ விரும்புவோர் ஹிந்தியை நேசிக்க வேண்டும் என தடாலடியாக கருத்து தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் நிஷாத், நாட்டில், மாநில ‘பிராந்திய மொழியும் மதிக்கப்படுகிறது.  ஆனால் முதலில் இந்தி…பிறகுதான்  பிராந்திய மொழி’ என கூறியதுடன், நீங்கள் இந்தியாவில் வசிக்கிறிர்கள் என்றால் இந்தியை நேசிக்க வேண்டும். இந்தி பேச முடியாவிட்டால் நாட்டை விட்டு வெளியேறி செல்லலாம் என்றும்,  இந்திக்கு எதிரானவர்கள் அல்லது ‘இந்தியை விரும்பாதவர்கள்’ ‘வெளிநாட்டவர்கள்’ அல்லது ‘வெளிநாட்டு சக்திகளுடன் உறவு வைத்திருப்பவர்கள்’ என்று கருதப்படுவார்கள் என்றும் கூறினார்.

அமைச்சர் சஞ்சய் நிஷாத்  பாஜகவின் கூட்டணி கட்சியான நிஷாத் கட்சியின் தலைவர். இவர் யோகி தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றி வருகிறார்.