லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ள பாஜக ஆட்சி நேற்று மாலை பதவி ஏற்றதும். முதல்வராக யோகி ஆதித்யநாத் 2முறையாக பதவி ஏற்றார். அவருடன்  2துணைமுதல்வர் உள்பட 52 அமைச்சர்களுடளும் பதவி ஏற்றனர்.  பதவி ஏற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

403 சட்டமன்ற தொகுதிகளைக்கொண்ட உ.பி.யில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. அங்கு பாஜக கூட்டணி 273 இடங்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இதையடுத்து அமைச்சரவை பதவி ஏற்பு விழா நேற்று மாலை லக்னோவின் அடல் பிஹாரி வாஜ்பாய் எகானா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த விழாபில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, அமித் ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் விழாவில் பங்கேற்றனர். பாஜகவினர், பொதுமக்கள் என சுமார் 50,000 பேர் கிரிக்கெட் மைதானத்தில் குழுமியிருந்தனர். மாலை 4.00 மணிக்கு பதவியேற்பு விழா தொடங்கியது.

முதலாவதாக யோகி ஆதித்யநாத், முதல்வராக பதவி ஏற்றார். மாநில ஆளுநர் ஆனந்திபென் படேல் அவருக்கு பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். தொடர்ந்து, கேசவ் பிரசாத் மவுரியாவும், பிரஜேஷ் பாதக்கும் துணை முதல்வர்களாக பதவி ஏற்றனர். இதையடுத்து 16 கேபினட் அமைச்சர்கள், 14 தனி அதிகாரம் மற்றும் 20 இணை அமைச்சர்கள் என 50 பேர் பதவி ஏற்றனர். இவர்களில் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 2 பேருக்கு கேபினட் அந்தஸ்து பொறுப்பு வழங்கப்படுடுள்ளது.

அதன்படி, கூட்டணி கட்சிகளான அப்னா தளம் (சோனுலால்) கட்சி சார்பில் ஆஷிஷ் படேலுக்கு கேபினட் பதவி கிடைத்துள்ளது. அவர் அக்கட்சியின் தலைவரும் மத்திய இணை அமைச்சருமான அனுப்பிரியா படேலின் கணவர். மற்றொரு கூட்டணியான மீனவர் சமூக ஆதரவு பெற்ற நிஷாத் கட்சி தலைவர் சஞ்சய் நிஷாத்துக்கு கேபினட்டில் இடமளிக்கப்பட்டிருக் கிறது.

துணை முதல்வரான பிரஜேஷ் பாதக், பிராமண சமூகத்தின் முக்கிய முகமாகக் கருதப்படுபவர்.  காங்கிரஸின் பிராமண தலைவராக இருந்து பாஜகவில் இணைந்த ஜிதின் பிரசாத் கேபினட்டில் சேர்க்கப்பட்டுள்ளார். ஜாட், தாக்கூர், தாழ்த்தப்பட்டோர் என அனைத்து சமூகத்தினரையும் உள்ளடக்கியதாக அமைச்சரவை உள்ளது. லக்னோ பல்கலைக்கழக முன்னாள் மாணவர் பேரவைத் தலைவரும், பாஜகவின் சிறுபான்மை பிரிவு பொறுப்பாளருமான தானிஷ் ஆஸாத் அன்சாரி இணை அமைச் சராகி உள்ளார்.