போபால்,

பாரதியஜனதா ஆட்சி செய்துவரும் மத்தியபிரதேசத்தில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை பேச்சுவார்த்தைக்கு வர வலியுறுத்தி முதல்வர் சவுகான் இன்றுமுதல் உண்ணாவிரத போராட்டம் இருக்கப்போவதாக அறிவித்து உள்ளார்.

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வருகிறது. மத்திய பிரதேசத்தில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 287 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ள அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.

மத்தியபிரதேசத்தில் முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாரதியஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து  3வது முறையாக வெற்றிபெற்று ஆட்சி நடத்தி வருகிறது.

இங்கு மாநில பாரதியஜனதா அரசின் நிர்வாக சீர்கேடு காரணமாக  விவசாயிகளின் தற்கொலை அதிகரித்து வருவதாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயப் பொருள்களுக்கு உரிய விலை நிர்ணயம், கடன் தள்ளுபடி உள்ளிட்டக் கோரிக்கைளை வலியுறுத்திக் கடந்த 1 தேதி முதல் மத்தியப் பிரதேசத்தில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, கடந்த 6ம் தேதி மத்தியப் பிரதேசத்தில் உள்ள மான்ட்சர் மாவட்டத்தில், விவசாயிகள் பேரணி சென்றனர். அப்போது ஏற்பட்ட வன்முறை காரணமாக போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 6 விவசாயிகள் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.

இதையடுத்து மாநிலம் முழுவதும் விவசாயிகள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக மத்திய பிரதேசத்தில் கடும் கொந்தளிப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

விவசாயிகள் கோரிக்கை நிறைவேறும்வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று மாநிலம் முழுவதும் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். ஆளும் பி.ஜே.பி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவாறு போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நாளுக்கு நாள் வலுவடைந்து வரும் இந்த போராட்டம் தற்போது தலைநகர் போபால் வரை பரவியுள்ளது.

இந்நிலையில், அங்கு அமைதி நிலவவும், விவசாயிகள் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முன் வரவேண்டும் என வலியுறுத்தி, இன்று முதல் (சனிக்கிழமை) காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக  அம்மாநில முதல்வர் சிவராஜ் சுங் சவுஹான் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக ம.பி.யில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.