உ.பி. சட்டமன்ற தேர்தல்: 2வது கட்ட பிரசாரம் இன்றுடன் ஓய்வு!

Must read

லக்னோ,

உ.பி.யின் 2வது கட்ட தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்வு பெறுகிறது. உத்தரபிரதேச சட்டமன்றத்தேர்தல் 7 கட்டமாக நடைபெற்று வருகிறது. முதல்கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில், 2வது கட்ட தேர்தல் 15ந்தேதி நடைபெற இருக்கிறது.

67 தொகுதிகளில்  2-வது கட்ட தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தொகுதிகளில் அனல் பறக்கும் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. வருகின்ற புதன்கிழமை அந்தத் தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடக்கவிருக்கிறது.

ஆளும் சமாஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணி, பாரதீய ஜனதா, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் தேர்தலை சந்திக்கின்றன. மும்முனைப்போட்டி காரணமாக உத்தரபிரதேச மாநில சட்டசபை தேர்தல், நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி உள்ளது.

இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ள நிலையில், இங்கு ஆட்சியைப் பிடிக்கும் கட்சி, ஜனாதிபதி தேர்தலில் முக்கிய பங்கு வகிக்க முடியும் என்பதால் இங்கு கடுமையான போட்டி நிலவுகிறது.

7 கட்ட தேர்தலில் முதல் கட்டமாக 73 தொகுதிகளில் கடந்த 11-ந் தேதி ஓட்டுப்பதிவு நடந்தது.

அதில் 63 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இரண்டாவது கட்டமாக 67 தொகுதிகளில் நாளை மறுதினம் (புதன்கிழமை) தேர்தல் நடக்கிறது.

இந்த இரண்டாம் கட்டத் தேர்தலில் முஸ்லிம் வாக்காளர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

67 தொகுதிகளில் சுமார் 45 தொகுதிகளில் 30 சதவீதத்துக்கும் அதிகமான முஸ்லிம் மக்கள் உள்ளனர்.

இதைக் கட்சிகள் கருத்தில் கொண்டு முஸ்லிம் வேட்பாளர்களுக்கே அதிக முக்கியத்துவம் அளித்துள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் 64 முஸ்லிம்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

இன்று (திங்கட்கிழமை) மாலை 6 மணியுடன் அனல்பறக்கும் பிரசாரம் ஓய்கிறது. நாளை மறுதினம் (புதன்கிழமை) காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது. 3-ம் கட்டமாக வரும் 19-ந் தேதி 69 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடக்கவிருக்கின்றது.

More articles

Latest article