லக்னோ: உ.பி. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இளைஞர்களுக்கான தேர்தல் அறிக்கையை  காங்கிரஸ் தலைவர்கள் ராகுல்காந்தி,  பிரியங்கா காந்தி இன்று தலைநகர் டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் வெளியிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களின் சந்திப்பின்போது, உ.பி. மாநில முதல்வர் வேட்பாளர் என்பது குறித்த கேள்விக்கு பிரியங்கா அளித்த பதிலில், அவர் முதல்வர் வேட்பாளராகும் வாய்ப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

உ.பி. உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி,  உத்தர பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி 10ந்தேதி தொடங்கி 7 கட்டங்களாகநடைபெறவுள்ளது. இதன் காரணமாக உ.பி.யில் தேர்தல் களம் அனல்பறந்து வருகிறது. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள யோகி தலைமையிலான பாஜக முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், ஆட்சியை பிடிக்க பிரியங்கா காந்தி தலைமையில் காங்கிரஸ் களமிறங்கி உள்ளது. அங்கு பல முனை போட்டியால், தேர்தல் களம் சூடுபறக்கிறது.

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் இளைஞர்களுக்கான பிரத்யேக தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, இளைஞர்களுக்கான பிரத்யேக தேர்தல் அறிக்கை குறித்து. உ.பி. மாநில இளைஞர்களிடம் கருத்து கேட்கப்பட்டு, அதன்படியே தயாரிக்கப்பட்டு உள்ளது.

இந்த தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதிகள் வெற்று வார்த்தைகள் கிடையாது. இந்தியாவுக்கான தொலைநோக்கு பார்வை. இது  உத்திரப்பிரதேசத்தில் இருந்து தொடங்க வேண்டும். இளைஞர்களின் வலிமையில் புதிய உத்தர பிரதேசத்தை கட்டமைக்க விரும்புகிறோம். நாங்கள் வெறுப்பை விதைக்க மாட்டோம். நாங்கள் மக்களை ஒன்றிணைக்கிறோம். இளைஞர்களின் வலிமையில் புதிய உத்தர பிரதேசத்தை கட்டமைக்க விரும்புகிறோம்.

உ.பி.யில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால்,  8 லட்சம் பெண்களுக்கும், 20 லட்சம் இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று உறுதி அளிப்பதாக தெரிவித்தவர்கள், தற்போதைய யோகி ஆட்சி மீது, உ.பி. இளைஞர்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர் என்றார்.

யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை, ஆனால் மக்களிடையே மதவெறுப்பை வளர்த்து வருகிறது. ஆனால்,   நாங்கள் ஜாதி, மதத்தை வைத்து பிரச்சாரம் செய்யவில்லை. உத்தர பிரதேசத்தின் வளர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம் என்றார்.

தொடர்ந்து தேர்தல் அறிக்கை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தியிடம், இந்த தேர்தலில் உ.பி. மாநில காங்கிரஸ் கட்சியின்  முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்தவர், இங்கு  என்னை தவிர வேறு யாரும் தெரிகிறார்களா? உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட கூடிய வேறு யாருடைய முகமும் உங்களுக்கு தென்பட்டதா…? என எதிர்கேள்வி எழுப்பினார்.

மேலும், மாநிலத்தின் ஒவ்வோர் இடத்திலும் என்னுடைய முகம் இருப்பதனை நீங்கள் காணலாம் என கூறினார்.  இதனால், உ.பி.யில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக பிரியங்கா காந்தியே அறிவிக்கப்படலாம் என்றும், அவர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு உருவாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.