டெல்லி:  உ.பி.யில் ஆட்சியை கைப்பற்ற தீவிரமாக களமிறங்கி உள்ள காங்கிரஸ் கட்சி, அம்மாநில இளைஞர்களை கவர பிரத்யேக தேர்தல் அறிக்கையை இன்று வெளியிடுகிறது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் ராகுல்காந்தி இன்று இளைஞர்களுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிடுகின்றனர்.

உபி. மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அங்கு ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜக போராடி வரும் நிலையில், ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் தீவிரமாக களமாற்றி வருகிறது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக பிரியங்கா காந்தி உ.பி.யில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையில், சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சிகள் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளதால், அங்கு பலமுனை போட்டி நிலவி வருகிறது.

ஏற்கனவே கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற  உத்தரப் பிரதேசத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி  வெறும் 7 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதன் காரணமாக, இந்த தேர்தலில் பல்வேறு தேர்தல் வியூகங்களை வகுத்து பணியாற்றி வருகிறது.  விவசாயிகள், இளைஞர்களையும், பெண்களையும், சிறுபான்மையினர், பட்டியலின மக்களையும் நம்பி தேர்தல் வியூகத்தை வகுத்து வருகிறது.

ஏற்கனவே பெண்களுக்கான பல சலுகைகளை வெளியிட்டுள்ள பிரியங்காக காந்தி, இதுவரை இரண்டு கட்ட வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டு உள்ளார். இதில், குறிப்பா முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் 125 பேர் இடம்பெற்றிருந்தனர். அவர்கள் 50 பேர் பெண்கள். இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்டது. 41 வேட்பாளர்களை கொண்ட இந்தப் பட்டியலில் 16 பெண்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் பல பாதிக்கப்பட்ட பெண்கள், அவர்களின் குடும்பத்தினருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில்,  இளைஞர்களை கவரும் வகையில், அவர்களுக்கான பிரத்யே தேர்தல் அறிக்கை இன்று வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் இளைஞர்களுக்கான தேர்தல் அறிக்கையை இன்று (ஜன.21) வெளியிடுகின்றனர். டெல்லியில் உள்ள கட்சி தலைமையகத்தில் பிரியங்காவும், ராகுலும் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்திக்கின்றனர். இந்த சந்திப்பின்போது, இளைஞர்களுக்கான தேர்தல் அறிக்கை வெளியிடப்பட உள்ளது. இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.