ஹரியானாவில் தவிக்கும் ஆதரவற்ற காளை மாடுகள்!

 

ஹரியானா,

ரியானாவில் ஆதரவின்றி தெருவில் சுற்றித்திரியும் சுமார் பத்தாயிரம் காளை மாடுகளை மத்திய பிரதேச மாநிலத்துக்கு இடமாற்றம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கு ஆகும் பயண செலவை இரு மாநிலங்களும் ஏற்றுக்கொள்ள முன்வராததால்,  அக்காளைகள் இன்னும் தெருவில் சுற்றித் திரிந்துக்கொண்டு வருகின்றன.

2016ம் ஆண்டு ஹரியானா சட்டசபை கூட்டத்தொடரின்போது,  மாநிலத்திலுள்ள 400க்கும் மேற்பட்ட கோசாலைகளில்   கிட்டத்தட்ட மூன்று லட்சத்துக்கு மேல் உள்ள பசுக்கள் பராமரிக்கப் படுகின்றன.   ஆயினும் 17 லட்சத்துக்கும் மேற்பட்ட காளைகளும், பசுக்களும் ஆதரவின்றி உள்ளன என அரசு தெரிவித்தது.

இவைகளில் பசுவுக்கு ஆதரவு கொடுக்கும் பலரும் காளை மாடுகளை கவனிப்பதில்லை. இதன் காரணமாக  காளை மாடுகள் ஆதரவின்றி தெருவில்  சுற்றித்திரிகின்றன.

பொதுவாக விவசாயிகள், நிலத்தை உழுவதற்காக காளைகளைக்கொண்டு ஏர் உழுவது வழக்கம். ஆனால், தற்காலங்களில் ஹரியானாவில் டிராக்டர் மூலம் உழுவது அதிகமானதால் காளைகள் கவனிக்கப்படாமல் விவசாயிகளால் விடப்பட்டுள்ளது.

இவ்வாறு அனாதையாக விடப்படும் காளை மாடுகள் அப்பகுதிகளில் உளள தெருவில் உணவுக்காக சுற்றித்திரிகிறது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசலும், விபத்துக்களும் ஹரியானாவில் பெருகி விட்டன.

இதனால் ஹரியானாவின் கௌ சேவா அயோக்  என்ற  நிறுவனம், மத்திய பிரதேச மாநிலத்துக்கு காளைகளை இலவசமாக கொடுக்க முன்வந்துள்ளது.

ஆனால்,  ஒரு காளையை சாலைவழியாக கொண்டு செல்ல சுமார் ரூ. 2000 வரை செலவாகிற தென்றும்,  அதற்கான செலவு தொகையை மத்தியப் பிரதேச அரசு ஏற்க மறுக்கிறதென்றும், அதனாலேயே இந்த திட்டம் இப்போது கிடப்பில் போடப் பட்டதாகவும் ஹரியானா அரசு சார்பாக கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து,  காளைகளை ரெயில் மூலம் மத்திய அரசுக்கு அனுப்படும் சாத்தியக் கூறுகளை இப்போது ஆராய்ந்து வருவதாக கூறும் ஹரியானா அரசு நிறுவனம, இந்த செலவை மத்திய பிரதேச அரசும்,  விவசாயிகளும் ஹரியானா அரசும் சேர்ந்து ஏற்றுக் கொள்ளலாம் என யோசனை தெரிவித்துள்ளது.

இந்த திட்டம் நிறைவேறுமானால், இந்த ஹரியானா காளைகள் மத்தியப் பிரதேச விவசாயி களுக்கு இலவசமாக வழங்கப்படும்.  இதைப் பெற்று, அந்த மாநில விவசாயிகள், காளைகளை விவசாயத்துக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் என்றும், எந்தக் காலத்திலும் விற்கமாட்டோம் எனவும் உறுதி அளிக்கவேண்டும் என கூறப்படுகிறது.

இதன் மூலம் வயதான காளைகளை அடிமாடாக விற்பது நிறுத்தப்படும் என நம்பப் படுகிறது.


English Summary
Unsupported bulls in Haryana