ஆதாரமில்லாத குற்றச்சாட்டு: அண்ணாமலை மன்னிப்பு கேட்க அமைச்சர் செந்தில் பாலாஜி வலியுறுத்தல்

Must read

சென்னை: ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டு கூறிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

தமிழக பா.ஜ.க தலைவராக இருக்கும் அண்ணாமலை, தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக, ‘முறைகேடு’ புகாரை முன்வைத்து வருகிறார். அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், அதை ஒவ்வொன்றாக வெளியிடுவேன் என்றும் கூறியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அத்துடன், தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கிய நிலுவை தொகையான ரூ.29.64 கோடியில் அமைச்சர் செந்தில் பாலாஜி 4% கமிஷன் பெற்றதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர், தன்மீது புகார் கூறுபவர்கள்  24 மணி நேரத்தில் ஆதாரங்களை வெளியிடாதது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

போகிற போக்கில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை சமூக வலைத்தளங்களில்  வேலையில்லாதவர்கள் சுமத்த கூடாது என்று அண்ணாமலையை சாடியவர்,  பொதுவெளியில்  குற்றச்சாட்டுகளை ஆதாரமின்றி சுமத்த கூடாது என்று  கூறியுள்ளார்.

அரசின் மீது அவதூறு பரப்புவதை நாங்கள் சும்மா பார்த்து கொண்டு இருக்க மாட்டோம் என்று எச்சரித்துடன்,  அரசின் மீது ஆதாரமுடன் குற்றம் சுமத்தினால் நாங்கள் விளக்கம் அளிக்க தயாராக உள்ளோம். மின்துறையில் அனைத்து திட்டப்பணிகளையும் வெளிப்படை தன்மையுடன் அரசு நிறைவேற்றி வருகிறது என்றும், தன்மீது  குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ள அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி வலியுறுத்தி உள்ளார்.  இந்த விவாரம் சமூக வலைதளங்களிலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

மின்சார துறை ஊழல் குறித்து அண்ணாமலை தெரிவித்தது என்ன?

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக, ‘முறைகேடு’ புகாரை முன்வைத்தார். ‘தற்போது நலிவடைந்துள்ள நிலையிலுள்ள ஒரு மின்நிலையத்தை, ஆளுங்கட்சிப் பிரமுகர் ஒருவர் வாங்கி, அதன் வாயிலாக, ரூ.5,000 கோடிக்கு மின்சாரம் விற்க, தமிழக மின்வாரியத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், இதில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த சில அமைச்சர்களும் லாபத்தை ஈட்டுவதற்காகத்தான் இந்த ஒப்பந்தம் நடைபெறுகிறு என்று குற்றம் சுமத்தி இருந்தார்.

மேலும், எந்த நிறுவனத்தை, எந்த அமைச்சர்  வாங்குகிறார் என்ற பெயரை தற்போது வெளியிட விரும்பவில்லை. தேவைப்படும்போது ஒப்பந்தப் பேச்சு குறித்து எங்களிடம் உள்ள ஆவணங்களை மக்கள் முன் வெளியிடுவோம்’ என்று பேசியிருந்தார்., திமுக  திரும்பவும் 2006 -11 பாதைக்குப் போக மாட்டார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்ததார்.

மேலும், `தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்ததாரர்களுக்கு பல மாதங்களாக எந்தத் தொகையும் வழங்கப்படாமல் திடீரென ரூ.29.64 கோடி வழங்கப்பட்டதற்கு காரணம் என்ன… இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் சொல்ல முடியுமா?’ எனக் கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், சில ஒப்பந்ததாரர்களின் பெயர்களையும், அவர்களது வங்கிக் கணக்கில் போடப்பட்ட பணம் தொடர்பான புகைப்படடம் உள்ளிட்டவற்றையும் பதிந்த அவர், கூடவே, “இந்த வாரம் அனல், அடுத்த வாரம் சோலார், அடுத்த வாரத்துக்கு பின் தயாராகிக்கொண்டிருக்கும் ‘பெரிய’ நிறுவனம்’’ என்று கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துப் பதிவிட்டிருந்தார்.

இண்ணாமலையின் டிவிட் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் தெரிவித்து டிவிட் போட்டிருந்தார். அதில், `மின்வாரியத் துறையில் முறைகேடு நடந்திருக்கிறது என்று அண்ணாமலை கூறியதற்கு ஆதாரத்தைக் கேட்டால், வாரிய அலுவலகத்துக்கு அனுப்பிய நிதியை, யாருக்கு அனுப்பியது என்பது தெரியாமல், திருட்டுத்தனமாக எடுக்கப்பட்ட அந்த Excel கையில் இருந்தும், அந்தத் தொகையையும் ரூ. 29.99 கோடியென சரியாக எழுதக்கூடத் தெரியாமல், அதிமேதாவியாக எண்ணி, 4% கமிஷன் என மீண்டும் பொய்ப் புகார் கூறி கழக ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தப் பார்க்கும் அண்ணாமலை, இதற்கான ஆதாரத்தையும் இன்றே வெளியிட வேண்டும்.  இல்லை, அவர்களது வழக்கப்படி மன்னிப்புக் கேட்க வேண்டும்.

2021 மார்ச் மாதம் முதல் 06.05.2021 வரை, மின் கொள்முதல், தளவாட கொள்முதல் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு சேரவேண்டிய ரூ.15,541 கோடி நிலுவையில் இருந்தது. அக். 1-ல் PFC & REC நிறுவனங்களிடமிருந்து நிதி வந்த பிறகு, தலைமை நிதிக் கட்டுப்பாட்டு அலுவலகத்தில் நிலுவைத் தொகைகள் சரிபார்க்கப்பட்டு, அந்தந்த மின் பகிர்மான மற்றும் மின் உற்பத்தி வட்டத்துக்குரிய மேற்பார்வை மற்றும் தலைமைப் பொறியாளர்கள் அலுவலக வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்பட்டு, பின்னர் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. இதுவே வழக்கமான நடைமுறை’’ என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு பதில் தெரிவிக்கும் வகையில் மீண்டும் டிவிட் பதிவிட்ட அண்ணாமலை, ‘கடந்த வாரம் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.20 வரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. உற்பத்தி செய்யும் அனல் மின்சாரத்தின் உற்பத்திச் செலவைவிட, ஐந்து மடங்கு இது கூடுதலான விலை’ என்று பதிவிட்டு, அதற்கு ஆதாரமாக ஒரு புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார்.  அத்துடன், செந்தில் பாலாஜி குறித்து ஸ்டாலின் பேசிய பழைய வீடியோ ஒன்றையும் பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்த அமைச்சர்,  ‘இந்திய மின்சந்தையில் அக்டோபர் 18 அன்று விலை, குறைந்தபட்சம் ரூ. 1.99 /- யூனிட். அதிகப்பட்ச விலை ரூ.8.50/- யூனிட், சராசரி ரூ. 6.00/- யூனிட்.  அதிமேதாவிகளும், ஆர்வக்கோளாறுகளும், வாட்ஸ்அப் வீரர்களும் IEX இணையதளத்தைப் பார்த்து அறிந்துகொள்ளவும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு இருவரும் ஒருவருக்கொருவர் ஊழல் சம்பந்தமாக பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

More articles

Latest article