இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து மக்கள் போராட்டம் வெடித்தது, ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த போராட்டத்தின் காரணமாக பிரதமர் பதவியை இன்று ராஜினாமா செய்தார் மஹிந்த ராஜபக்சே.

இதனைத் தொடர்ந்து இலங்கையின் பல்வேறு பகுதிகளில் வரலாறு காணாத வன்முறை நடைபெற்று வருகிறது. நாடுமுழுதும் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு பலனற்று போனதை அடுத்து அதிபர் மாளிகைக்குள் ராணுவத்தினர் நுழைந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகி இருக்கிறது.

போராட்டத்தை ஒடுக்க கடந்த வெள்ளியன்று அவசர நிலை பிரகடனப் படுத்தப் பட்டது, இருந்தபோதும் வன்முறை ஓய்ந்த பாடில்லை.

பிரதமரின் அதிகாரபூர்வ இல்லமான ‘டெம்பிள் ட்ரீஸ்’ பகுதியில் இன்று காலை முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது, போராட்டக்காரர்கள் பிரதமரின் இல்லம் நோக்கி முன்னேறுவதை தடுக்க ராஜபக்சேவின் ஆதரவாளர்களும் களத்தில் குதித்தனர்.

‘டெம்பிள் ட்ரீஸ்’ செல்லும் பாதையில் இருந்த வாகனங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டது. வன்முறையாளர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டு உள்ளிட்டவற்றை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கொழும்பு அருகில் உள்ள நெகோமோ நகரில் ராஜபக்சே குடும்பத்தினருக்குச் சொந்தமான அவென்ரா கார்டன்ஸ் ஹோட்டல் தீ வைத்து கொளுத்தப்பட்டது.

அதேபோல், கல்வி மற்றும் தோட்ட தொழில் துறை அமைச்சரான ரமேஷ் பதிரனே வீடும் தீக்கிரையாக்கப்பட்டது.

முன்னதாக இன்று மாலை ராஜபக்சே கட்சியைச் சேர்ந்த எம்.பி. அமரகீர்த்தி அத்துகோரல வன்முறைக்கு பலியானதாக உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் அமரகீர்த்தி சென்ற வாகனம் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து வன்முறையாளர்களை நோக்கி அவர் துப்பாக்கியால் சுட்டதாகவும் பொதுமக்களிடம் இருந்து தப்பித்து ஓடிய அவர் ஒரு கட்டிடத்தில் பதுங்கிக்கொண்டதாகவும் அங்கே அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் மற்றொரு தகவல் கூறுகிறது.