புதுடெல்லி: ஐ.நா. அமைதிப் படையினருக்காக, கொரோனா தடுப்பூசி மருந்துகளை இலவசமாக இந்தியா வழங்கியமைக்கு, ஐ.நா. சபை பொதுச் செயலர் நன்றி தெரிவித்துள்ளார்.

உள்நாட்டில், கொரோனா தடுப்பு மருந்துகளை செலுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவரும் நிலையில், இதர நாடுகளுக்கும், தடுப்பூசிகளை வழங்கி, உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. ஐ.நா. அவையின் அமைதிப் படையினருக்காக, சமீபத்தில் தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டன. இந்நிலையில், இந்த உதவிக்கு ஐ.நா. பொதுச் செயலர் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, ஐ.நா. சபைக்கான இந்தியாவின் நிரந்திர தூதர் திருமூர்த்தி, டுவிட்டர் வாயிலாக குறிப்பிட்டுள்ளதாவது, “அமைதிப் படையினருக்காக, 2 லட்சம் கொரோனா தடுப்பூசி, ‘டோஸ்’களை வழங்கியதற்கு, நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரெஸ் நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பிவைத்தார்.

அதில், உலகளவில் கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கையில், இந்தியா தலைமைத்துவத்துடன் இருப்பதை குட்டரெஸ் குறிப்பிட்டார்.

மேலும், மருந்துகள், பரிசோதனை கருவிகள், வென்டிலேட்டர்கள் உள்ளிட்டவற்றை, 150க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு வினியோகித்து உதவி வருவதற்கு இந்தியாவைப் பாராட்டினார்” என்று குறிப்பிட்டுள்ளார் திருமூர்த்தி.