சேலம்

ராய்ச்சி மாணவி ஒருவர் அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் சேலம் பெரியார் பல்கலை பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோபி என்பவர் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பதிவாளர் பொறுப்பில் நியமிக்கப்பட்டார்.  அவர் அதே பல்கலைக்கழகத்தில் பயிலும் ஆராய்ச்சி மாணவி ஒருவரை ஞாயிற்றுக்கிழமை வகுப்பு இருப்பதாகக் கூறி பல்கலைக்கழகத்திற்கு அழைத்துள்ளார்.  இதையொட்டி மாணவி  அவருக்குத் துணையாகத் தனது உறவினர் ஒருவரை அழைத்துக் கொண்டு வந்துள்ளார்.

கோபி மாணவியின் உறவினரை வெளியில் இருக்கச் சொல்லிவிட்டு மாணவியை மட்டும் தனது ஓய்வு விடுதிக்கு வரவழைத்ததாகத் தெரிகிறது  மாணவி சிறிது நேரத்திற்குப்  பிறகு பதட்டத்துடன் வெளியே வந்துள்ளார். வெளியில் காத்திருந்த உறவினர்  மாணவியிடம் விசாரித்தபோது மாணவி பதிவாளர் தன்னிடம் தகாத முறையில் நடக்க முயன்றதாகவும் பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்த முயற்சி செய்ததாகவும் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர், கோபத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல் பதிவாளர் அறைக்குச் சென்று கோபியை சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.  நிலைகுலைந்து போன பதிவாளர் கோபி, உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.   அவர் அடையாளம் தெரியாத மூன்று பேர் தன்னை தாக்கியதாகக் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்தபோது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது  அந்த மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் உடனடியாக பதிவாளரை அதிரடியாகக் கைது செய்தனர். கோபியிடம் தொடர்ந்து விசாரணை நடபெற்று வருகிறது.