டில்லி

சுமார் 40 கோடி தொழிலாளர்களுக்கு பயனளிக்க உள்ள தொழிலாளர் பாதுகாப்பு சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்திய தொழிலாளர் நலச் சட்டம் மிகவும் சிக்கலாக உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  அதை ஒட்டி அரசு இதை எளிமைப்படுத்த நான்கு பாகங்களாக பிரிக்க முடிவு செய்தது.  அவை ஊதியம், தொழிலாளர் பாதுகாப்பு, தொழில் உறவுகள், மற்றும் சமூக பாதுகாப்பு ஆகியவை ஆகும்.

சென்ற வாரம் ஊதிய சட்ட பிரிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.   இதில் அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான குறைந்த பட்ச ஊதியம், மற்றும் ஊதியம் அளிப்பு குறித்த விதிகள் இயற்றப்பட்டுள்ளன.   அடுத்த கட்டமாக தொழிலாளர் பாதுகாப்பு சட்டப்  பிரிவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.

இது குறித்து மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், “தொழிலாளர் பாதுகாப்பு சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  இது வேலை செய்யும் இடத்தின் பாதுகாப்பு அம்சங்கள்,  வேலை செய்பவர்களின் பாதுகாப்பு, மற்றும் வேலையின் பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவை உள்ளடங்கியதாகும்.  இதன் மூலம் சுமார் 40 கோடி தொழிலாளர்கள் பயனடைவார்கள்” என தெரிவித்துள்ளார்