கமதாபாத்

குஜராத் மாநிலத்தை சேர்ந்த தலித் இளைஞர் அவருடைய ராஜபுத்திர மனைவியின்பெற்றோரால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.

குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள வர்மோர் கிராமத்தில் வசிக்கும் ஹரீஷ் சோலங்கி என்னும் தலித் இளைஞர் ராஜபுத்திர இனத்தை சேர்ந்த ஊர்மிளா ஜாலா என்னும் பெண்ணை ஆறு மாதம் முன்பு காதல் திருமணம் செய்துக் கொண்டார்.  இந்த திருமணத்துக்கு பெண் வீட்டார் ஒப்புதல் அளிக்கவில்லை.  இந்நிலையில் ஊர்மிளா கர்ப்பம் அடைந்தார்.

சுமார் இரண்டு மாதம் முன்பு ஊர்மிளா அவர் தந்தை வீட்டார் திடீரென அழைத்துச் சென்று விட்டனர்.   அவர் அதன் பிறகு ஹரீஷுடன் எவ்வித தொடர்பும் இன்றி உள்ளார்.  எனவே தனது மனைவியை மீண்டும் அழைத்து வர ஹரீஷ் சென்றார்.   தன் மனைவியை பாதுகாப்புடன் அழைத்துச் செல்ல  பெண்கள் உதவி ஆலோசகர் பாவிகா நவ்ஜிபாய் மற்றும் காவலர் ஆகியோருடன் அரசு வாகனத்தில் சென்றுள்ளார்.

ஊர்மிளாவின் பெற்றோருடன் பாவிகா பேச்சு வார்தை நடத்திக் கொண்டு இருந்த  போது ஹரிஷ் வெளியில் அரசு வாகனத்தில் காத்திருந்துள்ளார்.     சுமார் 20 நிமிட  பேச்சு வார்த்தைக்கு பிறகு மாலை சுமார் 7 மணிக்கு பாவிகா வெளியில் வந்து ஹரீஷுடன் நடந்ததை சொல்லிக் கொண்டு இருந்துள்ளார்.  அப்போது ஒரு காரில் எட்டு பேர்களுடன் ஊர்மிளாவின் தந்தை அங்கு வந்துள்ளார்.

திடீரென அந்த எட்டு நபர்கள் ஹரிஷை கத்தியால் வெட்டி கொலை செய்துள்ளனர்.   இதை தடுக்க காவலரும் தாக்கப்பட்டார்.   தங்கள் முன்னாலேயே நடந்த இந்த தாக்குதலால் பயந்து போன பாவிகா நவ்ஜிபாய் காவல்துறைக்கு புகார் அளித்தார்.  காவலர்களைக் கண்ட எட்டு பேரில் எழுவர் ஓடி விட்டனர்.  ஒருவர் மட்டுமே பிடிபட்டுள்ளார்.