டெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் வன்முறை தொடர்பான விசாரணைக்கு தனது மகன் ஆஷிஸ் மிஸ்ரா முழு ஒத்துழைப்பு தருவார் என மத்திய இணைஅமைச்சர் அஜய் மிஸ்ரா உறுதி அளித்து உள்ளார். மேலும், இந்த வன்முறையின்போது, ‘எனது கார் டிரைவர், 3 பாஜக தொண்டர்கள் கொல்லப்பட்டனர். இது ஒரு சதி என்றும் தெரிவித்து உள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் லகிம்பூர் மாவட்ட விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.  அங்கு நேற்று விவசாயிகள் மீது மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ரா மகன் மற்றும் உறவினர்கள் சென்ற கார் புகுந்து விபத்து ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து விபத்து மற்றும் வன்முறை சம்பவங்களில் 4 விவசாயிகள் உள்பட 9 பேர் கொல்லப்பட்டனர்.  இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்தின் பின்னணியில் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உள்ளதாக சர்ச்சை கிளம்பி யுள்ளது. அஜய் மிஸ்ரா தனது காரில் வந்து சம்யுக்த கிசான் மோர்சா தலைவர் தஜிந்தர் சிங்கை தாக்கியதாகவும், அவர் மீது காரை ஏற்ற முயன்றதாகவும் விவசாய அமைப்பினர் புகார் தெரிவித்துள்ளனர். இதனால், இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கி வருகின்றன.

ஆனால், வன்முறை சம்பவம் நடைபெற்றபோது, தான் அங்கு இல்லை  என ஆஷிஷ் மிஸ்ரா மறுப்பு தெரிவித்துள்ளதுடன், அந்த நேரத்தில் வேறொரு நிகழ்வில் பங்கேற்றேன் என கூறியுள்ளார். ஆனால், ஆஷிஸ் மிஸ்ரா உள்பட 11 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக உள்துறை அமைச்சர் அஜய் மிஸ்ரா கூறுகையில், இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. நமது நாட்டில் சட்டம் அனைவருக்கும் பொதுவானது. எனவே அனைத்து ஆதாரங்களும் சட்டத்தின் முன் சமர்ப்பிக்கப்படும். எனது மகன் சம்பவயிடத்தில் இல்லை என்பது உறுதியான ஒன்று. அதற்கான வீடியோ ஆதாரம் உள்ளது. அவர்மீது பொய்யான குற்றச்சாட்டு கூறப்பட்டு உள்ளது. அவர்  விசாரணைக்கு தயாராக இருக்கிறார், விசாரணைக்கு முழு  ஒத்துழைப்பு தருவார் என்று கூறியுள்ளார்.

மேலும், ,இந்த வன்முறையின்போது, ‘எனது கார் டிரைவர் மற்றும் 3 பாஜக தொண்டர்கள்  கொல்லப்பட்டனர். இது ஒரு சதி என்றும் தெரிவித்து உள்ளார்.