டில்லி

விரைவில் தேசிய சாலை பாதுகாப்பு வாரியம் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாட்டில் சாலை பாதுகாப்பு, புது அமைப்புக்கள் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றைக் கவனிக்க ஒரு தனி வாரியம் அமைக்க வேண்டும் என கோரிக்கை உள்ளது.  மேலும் போக்குவரத்து மற்றும் மோட்டார் வாகனங்களை ஒழுங்கு படுத்தும் பணிக்காகவும் ஒரு தனி அமைப்பு இல்லாத நிலை உள்ளது.  எனவே இது குறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் விரைவில் தேசிய சாலை பாதுகாப்பு வாரியம் நிறுவப்படும் எனவும் அதன் விதிமுறைகளும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இந்த அறிவிப்பில், வாரியத்தின் அமைப்பு, தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தகுதி, தேர்வு செயல்முறை, பதவிக்காலம், ராஜினாமா மற்றும் நீக்கத்திற்கான நடைமுறை, வாரியத்தின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள், வாரிய கூட்டங்கள் போன்றவை குறித்த விதிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

தேசிய சாலை பாதுகாப்பு வாரியத்தின் தலைமை அலுவலகம் டில்லியில் இருக்கும்.  நாட்டில் மற்ற இடங்களில் வாரியம் அலுவலகங்களை நிறுவலாம்.  இந்த வாரியத்தில் மத்திய அரசால் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள்.   வாரிய உறுப்பினர்கள் எண்ணிக்கை மூன்று பேருக்கு குறையாமலும் 7 பேருக்கு அதிகமாகலும் இருக்க வேண்டும்.

இந்த வாரியம் சாலை பாதுகாப்பு, புது அமைப்புக்கள், புதிய தொழில்நுட்பம் குறித்து முடிவு செய்ய உள்ளது.  தவிர இந்த வாரியம் போக்குவரத்து மற்றும் மோட்டார் வாகனங்களை ஒழுங்குபடுத்தல் ஆகிய பொறுப்புக்களையும் ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.