‘பாரத் மாதா கி ஜே’ கோஷம் போடாதவரைப் பார்த்து கூட்டத்தில் இருந்து வெளியேறுங்கள் என்று மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி கூட்டத்திற்கு வந்த கேரள இளைஞர்களைப் பார்த்து டோஸ் விட்டார்.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இன்று நடைபெற்ற இளைஞர் மாநாட்டில் மத்திய வெளியுறவுத்துறை மற்றும் கலாச்சாரத்துறை இணையமைச்சர் மீனாட்சி லேகி கலந்து கொண்டார்.

கூட்டத்தில் மீனாட்சி லேகி பேசிய பின் தனது உரையை முடிக்கும் போது ‘பாரத் மாதா கி ஜே’ என்று கூறி உரையை முடித்தார்.

அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட சிலர் பதிலுக்கு ‘பாரத் மாதா கி ஜே’ என்று கூற கூட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள் பலரும் மௌனமாக இருந்ததைப் பார்த்த அமைச்சர் மீனாட்சி லேகி ‘கேக்கல… சத்தமா…” என்று கூறியதோடு மீண்டும் ஒருமுறை தான் கூறுவதை திரும்ப கூறவேண்டும் என்று கேட்டார்.

அப்போதும் திருப்திப்படாத மீனாட்சி லேகி கூட்டத்தில் இருந்து ஒரு பெண்ணை பார்த்து “அந்தப் பெண் கையைக் கட்டிக்கொண்டு கோஷம் போடாமல் அப்படியே நிற்கிறார், ஏன் இந்தியா உங்களுக்கு அன்னை இல்லையா?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், “கோஷம் போடாவிட்டால் நீங்கள் இங்கிருந்து வெளியேறலாம்” என்று அந்தப் பெண்ணைப் பார்த்து ஆவேசமாக கூறினார்.

இளைஞர் மாநாட்டில் மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி இவ்வாறு ஆவேசமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.