டில்லி

தஞ்சலி நிறுவன அதிபர் பாபா ராம்தேவ் மருத்துவர்கள் குறித்து தவறாக விமரசனம் செய்ததற்கு மத்திய சுகாதார அமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கொரோன இரண்டாம் அலை காரணமாக நாடெங்கும் கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.   இதையொட்டி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டும் ஒரு சில மாநிலங்களில் மட்டுமே கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது.   இதே நிலை மற்ற மாநிலங்களிலும் ஏற்பட அரசுடன் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போராடி வருகின்றனர்.

பிரபல யோகா ஆசிரியரும் பதஞ்சலி நிறுவன அதிபருமான பாபா ராம்தேவ் ஒரு நிகழ்வில், ” தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வரும் அலோபதி மருத்துவ முறை முற்றிலும் முட்டாள்தனமானது. இந்த பெருந்தொற்று காலத்தில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்துகள் மக்களின் உயிரைக் காப்பதிலிருந்து தோல்வியடைந்துவிட்டன. அலோபதி மருந்துகளாலும், மருத்துவர்களாலும் லட்சக்கணக்கான உயிர்களை இழந்துள்ளோம். இந்த முறையை முற்றிலும் நீக்கிவிட்டு ஆயுர்வேத முறையை அமல்படுத்த வேண்டும்.” என்று கூறினார்.

அவர் மருத்துவர்களைக் கொலையாளிகள் என்று சுட்டிக்காட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  இது குறித்துப் பல மருத்துவர்கள் தொடர்ந்து அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  இந்திய மருத்ஹ்டுவர் சங்கம் அவருடைய சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்காக அவரை கைது செய்ய வேண்டும் எனத் தெரிவித்து அவருடைய கருத்து கோரி சட்டரீதியாக நோட்டிஸ் அனுப்பியது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் இது குறித்து, “பாபா ராம்தேவின் அலோபதி மருத்துவம் குறித்த கருத்துக்களால் நாட்டு மக்கள் மிகவும் துயரம் அடைந்துள்ளனர்.  இது குறித்து நான் ஏற்கனவே அவரிடம் தொலைப்பேசியில் பேசினேன்.  அப்போது அவரிடம் மருத்துவர்களும் சுகாதார ஊழியர்களும் கடவுளைப் போன்றவர் எனவும் கொரோனாவை எதிர்த்துப் போராடுவதில் அவர்கள் முன்னணியில் உள்ளதையும் தெரிவித்தேன்” எனக் கூறி உள்ளார்.

இந்நிலையில் பாபா ராம்தேவ் பேசிய நிகழ்வின் வீடியோ பதிவில் இருந்து சர்ச்சைக்குரிய பல பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன.