மதுரை: 
மாநில அரசின் உரிமையை ஒன்றிய அரசு தட்டிப் பறிக்கிறது என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டிவிட்ட சூழலில், இந்த உயர்வுக்கு ஒன்றிய  அரசுதான் காரணம் என்று அவர் குற்றம் சாட்டினர்.
2014-ம் ஆண்டு மத்திய பா.ஜ.க அரசு பொறுப்பேற்ற பிறகு, பெட்ரோல் (ஒரு லிட்டர்) மீதான வரியை ரூ.10.39 என்பதிலிருந்து ரூ.32.90 என உயர்த்திவிட்டார்கள். அதாவது, மூன்று மடங்குக்கு மேல் வரியை உயர்த்தியிருக்கிறார்கள். இதனால், மாநில அரசு வரியைக் குறைப்பதிலும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.10.39-ஆக இருந்தபோதே, கிட்டத்தட்ட 40 முதல் 45 சதவிகிதம் மாநிலங்களுக்குப் பகிரக்கூடிய நிதி அளவாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இப்போது, ஏதேதோ காரணங்களைச் சொல்லி ஒரு பைசாகூட மாநிலங்களுக்கு வழங்காமல், அந்த வரித் தொகையை மத்திய அரசு முழுமையாக எடுத்துக்கொள்கிறது. இதன் மூலம் மாநில அரசின் உரிமையை ஒன்றிய அரசு தட்டிப் பறிக்கிறது என்றும் தெரிவித்தார்.