கள்ளக்குறிச்சி:  
ள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் கணக்கில் வராத 6 கிலோ வெள்ளிப்பொருட்கள் மற்றும் ரூ.57,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 15 பேர், கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 297 பேர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 1,575 பேர் என மொத்தம் 1,888 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.  நேற்று 4-வது நாளாக நடைபெற்ற வேட்பு மனுத் தாக்கலில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 32 பேர், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 194 பேர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 1,088 பேர் என நேற்று ஒரே நாளில் 1,315 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் கணக்கில் வராத 6 கிலோ வெள்ளிப்பொருட்கள் மற்றும் ரூ.57,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கனங்கூர் பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்குப் போட்டியிட உள்ள ஒருவருக்கு ஆதரவு திரட்டுவதற்காக வீடு வீடாகச் சென்று 25 கிலோ அரிசி மூட்டை வழங்கிய மினி வேன் மற்றும் அதிலிருந்த 3 மூட்டை அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.