நாட்டில் இன்று ஒரே நாளில் 1,85,104 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது, உலகளவில் இந்தியாவில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கோரத்தாண்டவம் ஆடி வருகிறது, குஜராத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து ஊகிக்கக்கூட முடியாத அளவுக்கு உள்ளது.

இங்கு, மருத்துவமனைக்குள் செல்வதற்கு மணிக்கணக்காக ஆம்புலன்ஸ்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது, வெண்டிலேட்டர் தேவையும் அதிகரித்து வரும் அதேவேளையில், ஆக்சிஜென் தட்டுப்பாடும் நிலவி வருகிறது.

நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால் குஜராத்தில் உள்ள மயானங்களில் மக்கள் கூடுவதையும் குறைக்க இறந்தவர்களின் உடல்கள் இரவு நேரங்களில் அடக்கம் செய்வதுடன் சவக்குழிகளும் முன்கூட்டியே தோண்டப்பட்டு உள்ளன.

கவலைக்கிடமான நிலையில் உள்ளவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவர்களுக்கு தேவையான ரெம்டிசிவர் மருந்து தட்டுப்பாடின்றி கிடைக்க ஏப்ரல் 11 முதல் ஏற்றுமதிக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும், நாட்டில் உள்ள 7 மையங்களில் ஒரு மாதத்திற்கு மொத்தம் 10 லட்சம் வயல்கள் ரெம்டிசிவர் மருந்து தயாரிக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது, ஏற்கனவே கூடுதலாக 30 லட்சம் மருந்துகள் தயாரிப்பில் உள்ளது.

தற்போது மாதம் ஒன்றுக்கு 38.8 லட்சம் மருந்துகள் உற்பத்தி செய்யப்படும் நிலையில், இந்த உற்பத்தித்திறன் கூடிய விரைவில் மாதம் சுமார் 80 லட்சம் என்ற அளவிற்கு இரட்டிப்பாக உயரயிருக்கிறது.

மேலும், பல்வேறு நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு ஏற்ப இதன் விலை 900 ரூபாயில் இருந்து 5000 ரூபாய் வரை தற்போது விறக்கப்படுகிறது. இந்த விலையை குறைக்கவும் மத்திய அரசு மருந்து நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மத்திய அரசின் இந்த கோரிக்கையை ஏற்று டாக்டர் ரெட்டி’ஸ் நிறுவனம் தனது மருந்து விலையை 50 சதவீத அளவுக்கு குறைப்பதாக கூறியுள்ளது.

மருந்து தட்டுப்பாட்டை போக்கவும், கள்ள சந்தையில் விற்பதை தடுக்கவும், இந்த மருந்து எந்தெந்த முகவர்களிடம் கிடைக்கும் என்பதை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தங்கள் வலைதளத்தில் அனைவரும் அறிய செய்ய வேண்டும். அதே நேரத்தில், இந்த மருந்தை தனி நபர்கள் வீட்டில் லேசான காய்ச்சல் உள்ளவர்களுக்கு வழங்க கூடாது என்றும், மருத்துவமனையில் சுவாச கோளாறுடன் தீவிர சிகிச்சையில் உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.