நாட்டின் தலைநகரான டெல்லியில் வரலாறு காணாத அளவுக்கு தற்போது அதிகமான மாசு நிலவுவதால், அங்கு வசிக்கும் மக்கள் சுவாசிக்கவே முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். பள்ளிகள் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், வாகனங்கள் இயக்கவும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

இதன் காரணமாக தலைநகரம், மக்கள் வசிக்க தகுதியற்ற இடமாக மாறி வருவதாக சமூக ஆர்வலர்கள், புவியியல் விஞ்ஞானிகள் அதிர்ச்சி தெரிவித்து உள்ளனர்.

டெல்லியில் கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு காற்றுமாசு ஏற்பட்டுள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இதற்காக காரணமாக பக்கத்து மாநிலங்களான பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் விவசாய கழிவுகளை எரிப்பதால் உருவாகும் காற்று மாசு டில்லியை சூழ்ந்து மக்கள் சுவாதிக்க முடியாமலும், கண் எரிச்சலால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை குறிப்பிட்டு உள்ளது.

இதன் காரணமாக டில்லியில்,  சுகாதார அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. காற்று மாசைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

டெல்லியில் காற்று மாசுபடுவதை கட்டுப்படுத்த தவறியதாக  டெல்லி அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் கடந்த ஆண்டு ரூ.25 கோடி அபாரதம் விதித்தது மேலும்.  டீசல் வாகனங்களை  இயக்கவும் தடை விதித்தது.

கடந்த ஆண்டு ஜெனிவாவில் நடைபெற்ற உலக சுகாதார நிறுவனத்தின் சார்பில் காற்று மாசுபாடு மற்றும் உடல்நலம் குறித்த கருத்தரங்கத்தில், காற்றில் கலந்துள்ள நஞ்சை சுவாசிப்பதால் குழந்தைகளுக்கு சுவாசக் கோளாறு ஏற்படுவதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தது. இது தொடர்பாக கடந்த 2016ம் ஆண்டு மட்டும், உலக அளவில் 6 லட்சம் குழந்தைகள் பலியாகி உள்ளதாகவும், இந்தியாவில் சுமார் 1 லட்சம் குழந்தைகள் மரணத்தை தழுவியதாகவும் தகவலை வெளியிட்டு அதிர்ச்சி ஏற்படுத்தியது.

அதுபோல கடந்த ஆண்டு வெளியான இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வில், ” இந்தியாவில் மரணம் அடைபவர்களில் 8ல் ஒருவர் காற்று மாசுவினால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கிறார்கள். இது புகைப்பிடிப்பதை காட்டிலும் ஏற்படும் உயிரிழப்பு அதிகமாகும். காற்று மாசுவினால் இந்தியாவில் வாழும் மக்களிடம் சராசரி வாழ்க்கையானது குறைந்துள்ளது. இதனால் ஏராளமானோர் உயிர் இழப்பதோடு மட்டுமல்லாமல் பல்வேறு நோய்களையும் ஏற்படுத்துவதாக தெரிவித்திருந்தது. 

அத்துடன்,  77 சதவிகித மக்கள் இந்தியாவில் மோசமான நிலையில் மாசடைந்த காற்றை சுவாசிக்கின்ற னர். இது டில்லி, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் அதிகம் என்றும்,  காற்று மாசுபாட்டால் கடந்த 2018ம் ஆண்டு மட்டும் 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் இறந்துள்ளதாகவும் தெரிவித்திருந்தது.

இதுமட்டுமின்றி  கடந்த ஆண்டு வெளியான கிரீன்பீஸ் சவுத் ஏசியா அமைப்பின் ஆய்வறிக்கையில்,  இந்தியா வின் தலைநகர் டெல்லியின் புறநகர் பகுதியான குருக்ராம் பகுதிதான் உலகத்திலேயே மோசமான மாசு நிறைந்த நகராகும். இங்கு வாழும் மக்கள் ஒவ்வொருவரும் தாங்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டதற்கான காரணம் காற்று மாசுவே என்பதையும் உலகுக்கு எடுத்துக்காட்டியது.

இதுபோன்று பல்வேறு ஆய்வறிக்கைகள் தலைநகருக்கு எச்சரிக்கை செய்தும், மத்திய மாநில அரசுகளின் தெளிவற்ற, உறுதியற்ற தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளால், இந்த ஆண்டும்  காற்று மாசு வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து மக்கள் வீடுகளிலேயே முடங்கும் அபாய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

அதுபோல,  கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் காற்று மாசு 497 புள்ளிகள் இருந்ததாகவும், தற்போது அதனை விட 500 புள்ளிகளுக்கும் அதிகமாக இருப்பதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

காற்று மாசு காரணமாக வெளிச்சக் குறைபாடு ஏற்பட்டுள்ளதால் 37 விமானங்கள் வேறு விமான நிலையங்க ளுக்கு திருப்பி விடப்பட்டன. காற்றில் தூசுகள் அதிகம் இருப்பதால் பெற்றோர்கள் சிறு குழந்தைகளை வெளியில் கொண்டுவரவோ, அனுப்பவோ வேண்டாம் என்றும்,  இந்த விவகாரத்தில் அரசியல் செய்யாமல், ஒன்றாக இதற்கு ஒரு தீர்வை எட்ட வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

அபாய கட்டதை மீறிச் செல்லும் மாசுக் கட்டுப்பாடு குறித்து தினசரி அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதன்படி டெல்லி மற்றும் தலைநகர் பிராந்தியப் பகுதிகளில் காற்றின் தன்மை குறித்து அளவிடப்பட்டு வருவதாக பிரதமரின் முதன்மைச் செயலாளர் பி.கே. மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

காற்றின் தரம் தொடர்ந்து மோசமாக இருப்பதால் பள்ளிகளுக்கான விடுமுறை வரும் 8ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் வரை பள்ளி மற்றும் கல்லூரிகளின் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது.

காற்று மாசுபாட்டை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு வாகன கட்டுப்பாடு இன்று முதல் அமலுக்கு வரு கிறது. ஒற்றைப் படை, இரட்டைப் படை இலக்க எண்கள் அடிப்படையில் வாகனங்கள் இயக்கப்படும் என்று டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

காற்றில் எந்தெந்த மாசு இருக்கிறது, அதன் அளவு என்ன என்பதை கணக்கிட்டால், Air Quality Index, அதாவது காற்று மாசுவின் அளவு தெரியவரும்.

காற்று மாசை அளவிடும் முறையில் 2.5 மைக்ரான்கள் இருந்தால், அது மோசமாக பாதிக்கப்பட்டு உள்ள இடமாக அறிவிக்கப்படும் நிலையில், “2030 ஆண்டுக்குள் 10 மைக்ரான் அளவுக்கு மாசளவு உச்சத்தை தொடும் என அஞ்சப் படுகிறது. இதன் காரணமாக காற்று மாசை குறைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

பொதுவாக 50 வரை இருந்தால், நீங்கள் சுத்தமான காற்றை சுவாசிக்கிறீர்கள் என்று அர்த்தம். இது அதிகமாக, காற்றின் தரம் குறைந்து காணப்படும். அந்த காற்றை சுவாசிக்கும் பட்சத்தில், அது உடலுக்கு கடும் தீங்கை விளைவிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

காற்றின் தரம் குறித்த குறியீடு

காற்று தரக் குறியீட்டின்படி, 0-50 புள்ளிகளுக்கு இடையே இருந்தால் நல்லது,

51-100 புள்ளிகள் வரை இருந்தால் மனநிறைவு, 101-200வரை புள்ளிகள் இருந்தால் மிதமானது,

201-300 புள்ளிகள் இருந்தால் மோசம்,

301-400 வரை இருந்தால் மிக மோசம்,

401-500 புள்ளிகள் இருந்தால் மிகத்தீவிரம்,

500 புள்ளிகளுக்கு மேல் சென்றால் மிகத்தீவிரம் அல்லது நெருக்கடி என குறிப்பிடப்பட்டுள்ளது.

 டெல்லியில் 450 புள்ளிகளுக்கு மேல் காற்று மாசு நீடித்து வருகிறது.

இந்த வருடம் தீபாவளியின்போது கூட, அதிகரிக்காத காற்று மாசு, கடந்த சில நாட்களாக தீவிரமாக பரவி வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக, அண்டை மாநிலங்களில் உள்ள விவசாய நிலங்களில் உள்ள அறுவடை செய்யப்பட்ட எஞ்சிய பயிர்களை எரிப்பது என்று குற்றம் சாட்டப்படுகிறருது. இதில், இருந்து வெளியாகும்,  கார்பன் டை-ஆக்ஸைட், நைட்ரஜன் டை-ஆக்ஸைட், சல்ஃபர் டை-ஆக்ஸைட் காற்றில் கலப்பது மூச்சுத் திணறரை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. அதோடு, வாகனங்களில் இருந்து வெளியேற்றப்படும் புகை, கட்டுமான வேலைகள், தொழிற்சாலைகளில் இருந்து வரும் புகை என அத்தனையும் சேர்ந்து இந்த சூழலை உருவாக்கி இருக்கிறது.

இது தொடர்பாக பஞ்சாபில் வயல்வெளிகளில் காய்ந்த சருகுகளை எரித்ததாக 2,923 விவசாயிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது அங்குள்ள விவசாயிகளிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையில் காற்று மாசுவை கட்டுப்படுத்த, காற்று சுழற்றியை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வருகிறது.  டெல்லி போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் காற்று சுழற்றியை நிறுவ வேண்டியது மிகவும் அவசியம், அத்துடன் ஏராளமான மரங்கள் சாலையோரங்களில் நட்டி பராமரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த பரபரப்புக்கு இடையில் நேற்று டெல்லிவாசிகள், காற்று மாசுபாட்டால், தங்களுக்கு மூச்சுவிட சிரமமாக இருப்பதாக கூறி,  காற்று மாசுவை கட்டுப்படுத்தக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன், சமூக வலை தளங்களில்   #DelhiAirPollution #DelhiEmergency போன்ற ஹேஷ்டேக்குகளை டிரென்டிங்காக்கி வருகின்றனர்..

“நமக்கு முன்னே இருப்பதை பார்க்கக்கூட முடியவில்லை. பயமாக இருக்கிறது. எங்கள் குழந்தைகளுக்காகவும், எங்கள் வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்காகவும், முக்கியமாக எங்கள் உடல்நலம் மற்றும் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது ” என்று சமூக வலைதளங்களில் ஏராளமானோர் தங்களது மனக்குமுறலை பதிவிட்டு வருகின்றனர்.

தற்போது அதிகரித்து வரும் காற்று மாசினால், தலைநகர் டெல்லி மக்கள் வசிப்பதற்கே தகுதியற்ற இடமாக மாறி வருவது கண்கூடாக தெரிகிறது.  இதை தடுக்க மத்திய மாநில அரசுகள் அரசியல் பாரபட்சமின்றி  இணைந்து அதிரடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்…

இல்லையென்றால், சில ஆண்டுகளில் தலைநகர் டெல்லி…  சுடுகாடாக மாறி விடும் என்பதில் சந்தேகமில்லை… மனிதர்கள் வாழ்வதற்கே லாயக்கற்ற நகரமாக டெல்லி உருவாகிவிடும் என்பதிலும் ஐயமில்லை……!