டெல்லி: மகாராஷ்டிராவில் 12பாஜக எம்எல்ஏக்கள் சஸ்பெண்டு செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கில்  உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. இது அரசியலமைப்புக்கு முரணானது மற்றும் தன்னிச்சையானது மாநில அரசை விமர்சித்து மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் தீர்மானத்தை உச்ச நீதிமன்றம்  இன்று ரத்து செய்தது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வருகின்றன. இந்த நிலையில், கடந்த  2021ம் ஆண்டு  ஜூலை 5 நடைபெற்ற மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது, ஆளும் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே பரபரப்பு வாதங்கள் நடைபெற்றன.

வாதத்தின்போது சபாநாயகர் ஜாதவ், “இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு உள்ளாட்சித் தேர்தலில் இடஒதுக்கீடு அளிக்க வேண்டி உள்ளதால், 2011-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு வழங்கக் கோரும் தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும்” என அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்எல்ஏக்கள், அவைத் தலைவரை சூழ்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவைத் தலைவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறி, பாஜக எம்எல்ஏக்கள் க்ரிஷ் மகாஜன், சஞ்சய் குடே, ஆசிஷ் ஷெலார் உள்ளிட்ட 12 பேர் பேரவைக் கூட்டத்தொடரில் இருந்து ஓராண்டுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

அதன்படி, பிரச்சினை செய்த  ஆஷிஷ் ஷெலார், பராக் அல்வானி, அதுல் பட்கல்கர், யோகேஷ் சாகர், நாராயண் குச்சே, ஹரிஷ் பிம்பலே, அபிமன்யு பவார், ஜெய்குமார் ராவல், கீர்த்திகுமார் பாங்டியா, கிரிஷ் மகாஜன், ராம் சத்புட் மற்றும் சஞ்சய் குட் ஆகிய 12 உறுப்பினர்களை ஓராண்டிற்கு இடைநீக்கம் செய்து பேரவைத் தலைவர் உத்தரவிட்டார். இது தொடர்பாக பின்னர் சபையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

மகாராஷ்டிர பேரவைத் தலைவரின் உத்தரவை எதிர்த்து பாஜகவின் 12 எம்.எல்.ஏ.க்களும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கின் பலகட்ட விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில், இன்று உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

மகாராஷ்டிரா சட்டப்பேரவை இயற்றிய தீர்மானம்,  “அரசியலமைப்புக்கு எதிரானது”, “சட்டவிரோதம்” மற்றும் “சட்டசபையின் அதிகாரங்களுக்கு அப்பாற்பட்டது” என்று நீதிமன்றம் கூறியது.  அத்தகைய இடைநீக்கம் நடப்பு கூட்டத்தொடரான ​​மழைக்கால கூட்டத்தொடரில் மட்டுமே இருக்க முடியும் என்று கூறியது.

மேலும் சட்டப்பேரவை  விதிகளின்படி, 60 நாட்களுக்கு மேல் ஒரு உறுப்பினரை இடைநீக்கம் செய்ய பேரவைக்கு அதிகாரம் இல்லை என்று பெஞ்ச் சுட்டிக்காட்டியது.  ஒரு உறுப்பினர் 60 நாட்களுக்கு அதன் அனுமதியின்றி சபையில் இல்லாதிருந்தால் ஒரு இருக்கை காலியாக இருப்பதாகக் கருதப்படும் என்றும் தெரிவித்து உள்ளது.

இந்த தீர்ப்புக்கு மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.  12 எம்.எல்.ஏ.,க்களின் இடைநீக்கத்தை ரத்து செய்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுக்கு மாண்புமிகு நீதிபதியின் உத்தரவை நாங்கள் வரவேற்கிறோம் மற்றும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.