டில்லி

சூத் அசாரை சர்வதேச பயங்கரவாதி என ஐநா அறிவித்ததில் புல்வாமா தாக்குதல் பற்றி குறிப்பிடாதது ஏமாற்றம் அளிக்கிறது என காங்கிரஸ் கூறி உள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி காஷ்மீர் மாநிலத்தில் நடந்த புல்வாமா தற்கொலை தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர்.    இதற்கு பாகிஸ்தான் நாட்டின் ஜெய்ஷ் ஈ முகமது இயக்கம் பொறுப்பேற்றது.   ஏற்கனவே இந்த இயக்கம் இந்திய பாராளுமன்ற தாக்குதல் உள்ளிட்ட பல தாக்குதல்களை நிகழ்த்தி உள்ளது.

அதை ஒட்டி இந்த இயக்கத் தலைவன் மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட வேண்டும் என இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஐ நா பாதுகாப்பு சபைக்கு கோரிக்கை விடுத்தன.    ஆனால் அதற்கு சீனா ஒப்புதல் அளிக்க மறுத்தது.    ஏற்கனவே இரு முறை இதே கோரிக்கை விடுக்கப்பட்ட போதும் சீனா ஒப்புதல் அளிக்காததால் அது நிறைவேறாமல் இருந்தது.

தற்போது சீனா தனது நிலையை மாற்றிக் கொண்டு எதிர்ப்பை விலக்கிக் கொண்டது.   அதை ஒட்டி மசூத் அசார் சர்வதேச குற்றவாளியாக ஐநா பாதுகாப்பு சபையால் அறிவிக்கப்பட்டுள்ளான்.   இதற்கு பல உலக நாட்டு தலைவர்களும் இந்தியத் தலைவ்ர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா, “பாகிஸ்தானின் தீவிரவாதியான மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக ஐநா பாதுகாப்பு சபையால் அறிவிக்கப்பட்டுள்ளார்.  இது மிகவும் தாமதமான நடவடிக்கை எனினும் வரவேற்கத் தக்கது.

தீவிர வாதத்துக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் பாராட்டுக்குறியது.

ஆனால் ஐநா பாதுகாப்புச் சபை தனது அறிவிப்பில் காஷ்மீரில் நடந்த புல்வாமா தாக்குதலில் மசூத் அசார் பங்கேற்றது பற்றி குறிப்பிடாதது எங்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ள்து” என தனது டிவிட்டரில் பதிந்துள்ளார்.