ஜெனீவா:

ஈராக்கில் ஐ.எஸ் பயங்கரவாதிகளால் 39 இந்தியர்கள்  கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு ஐக்கிய நாடுகள் அவை இரங்கல் தெரிவித்து இருக்கிறது.

ஈராக் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான மொசூலை கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைப்பற்றினார்கள்.  அப்போது, இந்தியாவின் பஞ்சாப், இமாசலபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் இருந்து மருத்துவமனை கட்டுமான பணிக்காக அங்கு சென்றிருந்த 40 நபர்களை பயங்கரவாதிகள் கடத்திச்சென்றனர்.

இவர்களின் என்ன ஆனார்கள் என்பது  உடனடியாக தெரிய வரவில்லை. அப்போதே, அவர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதாக வெளியான தகவலை மத்திய அரசு நிராகரித்தது.

இந்த நிலையில், நேற்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசிய மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், ”ஈராக்கில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்களும் கொல்லப்பட்டதாக தெரிவித்தார்.  சுஷ்மா சுவராஜ் வாசித்த அறிக்கையை தொடர்ந்து அனைத்து கட்சி எம்.பி.க்களும் எழுந்து நின்று ஈராக்கில் கொல்லப்பட்ட இந்திய தொழிலாளர்களுக்காக சிறிது நேரம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்த நிலையில், 39 இந்தியர்கள் கொல்லப்பட்ட விவகாரத்துக்கு ஐக்கிய நாடுகள் அவையும் இரங்கல் தெரிவித்து உள்ளது.  மேலும், பயங்கரவாதிகளின், காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு இது ஒரு எடுத்துக்கட்டு என்றும் கூறியது.