டெல்லி:

உம்முல் கெர் என்ற 28 வயது பெண் யுபிஎஸ்சி தேர்வில் 420வது ரேங்க் எடுத்து வெற்றி பெற்றுள்ளார். இவர் பலவீனமான எலும்பு கோளாறால் பாதிக்கப்பட்டவர். இவர் தற்போது மாற்றுத்திறனாளிகள் இட ஒதுக்கீட்டில் ஐஏஎஸ் ஆகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இவருக்கு ஏற்பட்டுள்ள நோய் காரணமாக உடலில் 16 எலும்புகள் முறிவு ஏற்பட்டுள்ளது. 8 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இவர் தனக்கு 5 வயதாக இருந்தபோது பெற்றோருடன் டெல்லியில் குடியேறினார். இவரது தந்தை ஹஜ்ரத் நிஜாமுதீன் தெருக்களில் துணி வியாபாரம் செய்து, குடிசை பகுதியில் வசித்து வந்தார்.

மாற்றுத் திறனாளிகளுக்கான தீனதயாள் உதயப்பா இன்ஸ்டிடியூட்டில் இணைந்து 5ம் வகுப்பு வரை படித்தார். பின்னர் அமர்ஜோதி தொண்டு நிறுவன அறக்கட்டளையில் இணைந்து 8ம் வகுப்பு வரை பயின்றார்.

இது குறித்து உம்முல் கெர் கூறுகையில், ‘‘ அரசு சார்பில் நடத்தப்படும் தொண்டு நிறுவனம் அது. நான் அங்கு எவ்வித கட்டணமும் செலுத்த வேண்டியது கிடையாது. அங்கு உணவு சரியாக கிடைக்காது. எனினும் கல்வி கற்கும் வாய்ப்பு கிடைத்ததே எனக்கு திருப்தியாக இருந்தது.

அர்வச்சின் பார்தி பவன் சீனியர் செக்கண்டரி பள்ளியில் இணைந்து பயில விருப்பம் கொண்டிருந்தேன். அங்கு உள்கட்டமைப்பு வசதிகள் இருந்து. அங்கு கல்வி உதவித் தொகை கிடைக்கும் வாய்ப்பு இருந்தது. ஆனால் என் பெற்றோர் படித்த வரை போதும். ஒரு பெண்ணுக்கு தேவையான கல்வியை நீ படித்துவிட்டாய். மேற்கொண்டு படித்தால் எங்களுடன் இணைந்து இருக்க முடியாது என்று கூறிவிட்டனர்’’ என்றனர்.

இதனால் வீட்டை விட்டு வெளியேறிய அவர் திரிலோக்புரியில் உள்ள ஒரு காப்பகத்தில் இணைந்தார். டியூஷன் எடுத்து ஈட்டிய வருவாயில் இதற்கான கட்டணத்தை செலுத்தி வந்தார். ‘‘4 பிரிவுகளாக டியூஷன் எடுத்தேன். மாணவ மாணவிகள் அனைவரும் குடிசை பகுதியை சேர்ந்தவர்கள். அவர்களிடம் ரூ. 50 முதல் ரூ. 100 வரை மட்டுமே கட்டணம் வசூல் செய்யப்பட்டது.

அவர்களது குடும்பத்தினர் கூலி வேலை செய்பவர்கள். அதனால் அவர்களிடம் கூடுதலாக எதிர்பார்க்க முடியவில்லை. ஒரு பெண் தனியாக வாழ்வது என்பது மிகவும் கடினம். பாதுகாப்பானது இல்லை என்றாலும் எனக்கு வேறு வழி இல்லை’’ என்றார்.
பின்னர் அமர்ஜோதி தொண்டு நிறுவன அறக்கட்டளை உதவியுடன் 9 மற்றும் 10ம் வகுப்புகளை முடித்தார். பிளஸ் 2 தேர்வில் 91 சதவீத மதிப்பெண்கள் பெற்றார். கார்கி கல்லூரியில் இணைந்து படித்தார்.

‘‘கல்லூரியில் நடந்த ஒரு சில போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுத் தொகையை பெற்று தனது செலவுக்கு பயன்படுத்திக் கொண்டார். அதோடு டியூஷன் எடுக்க வேண்டும் என்பதற்காக மாலையில் நடந்த போட்டிகளில் அவர் கலந்துகொள்ள முடியாமல் போனது’’ என்று டெல்லி பல்கலைக்கழகத்தில் பயிலும் அவரது நண்பர் அபிஷேக் ரஞ்சன் தெரிவித்தார்.

2012ம் ஆண்டில் சிறிய விபத்தில் சிக்கிய அவர் ஒரு ஆண்டிற்கு சக்கர நாற்காலி பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. பட்டப்படிப்பு முடித்தவுடன் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக நுழைவு தேர்வில் வெற்றி பெற்று சர்வதேச கல்வியில் முதுகலை பட்டப்படிப்பில் இணைந்தார்.

அப்போது இவருக்கு ரூ. 2 ஆயிரம் கல்வி உதவித் தொகை கிடைத்தது. 2013ம் ஆண்டில் ஜூனியர் ரிசர்ச் பெல்லோ ஷிப் வெற்றி பெற்றதன் மூலம் மாதம் ரூ. 25 ஆயிரம் உதவித் தொகை கிடைத்தது.

உம்முர் கெர் கூறுகையில், ‘‘எனது பெற்றோர் என்னை பாதியில் விட்டது குறித்து நான் கவலைப்படவில்லை. அவர்களது நிலைமை அப்படி. தற்போது எனது பெற்றோர் ராஜஸ்தானில் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக அவர்களுடன் தொடர்பில் உள்ளேன்ர். அங்கு எனது சகோதரர் சிறிய அளவில் வளையல் கடை நடத்தி வருகிறார். அதை அவர்கள் பார்த்துக் கொள்கின்றனர். விரைவில் அவர்களை சென்று பார்ப்பேன்’’ என்றார்.