லண்டன்: கொரோனா பெருந்தொற்றின் 2வது அலை ஏற்படுத்தி வரும்  கடுமையான பாதிப்பை எதிர்கொள்ள  இந்தியாவுக்கு உதவ இங்கிலாந்து தயாராக இருப்பதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் கொரோனா பரவல் ஜனவரி மாதம் அதிகம் இருந்த நிலையில், தற்போது கட்க்குள் உள்ளது. இதனால், இங்கிலாந்து பிரதமர் இந்திய குடியரசு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர், ஏப்ரல் இறுதியில் வருவதாக கூறியிருந்தார். ஆனால், இப்போது, இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை தாக்கம் தீவிரமாக உள்ளதால், அவர் தனது இந்திய பயணத்தை ரத்து செய்தார்.

இந்தியாவில் கடந்த சில தினங்களாக ஒருநாள் கொரோனா பாதிப்பு 3 லட்சத்திற்கும் மேல் உயர்ந்து காணப்படுகிறது. கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை உயர்வால் நாட்டில் உள்ள மருத்துவமனைகளின் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. மேலும் ரெம்டெசிவர், ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.

இந்தியாவின்  ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்ய பல நட்பு நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன. ஆக்சிஜன் விநியோகத்தை விரைவுபடுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த நிலையிளல்,   இந்தியாவுக்கு உதவ தயாராக இருப்பதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த போரிஸ்,  “ கொரோனா பெருந்தொற்று பாதிப்பால் மிகக்கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இந்தியாவுக்கு எந்த வகையில் உதவலாம் என ஆராய்ந்து கொண்டிருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.