லண்டன்:

ஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன்வாங்கிவிட்டு லண்டனில் தலைமறைவாக வாழ்ந்து வந்த பிரபல வைர வியாபாரி நிரவ்மோடி கைது செய்யப்பட்டு லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், 4வது முறையாக ஜாமின் கேட்டு தொடரப்பட்டுள்ள மனு மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது.

பிரபல வைர வியாபாரியான நிரவ்மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில்  13,600 கோடி ரூபாய் அளவுக்கு கடன் வாங்கி  மோசடி செய்து விட்டு தலைமறைவானார். அவர் முகமாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு லண்டனில் வாழ்ந்து வந்தது தெரிய வந்த நிலையில், அவரை கைது செய்ய இந்திய அரசு லன்டன் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுத்தது.

அதைத்தொடர்ந்து, நிரவ் மோடி கைது செய்யப்பட்டு,  லண்டன் வெஸ்ட் மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதி மன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, தன்னை ஜாமினில் விடுவிக்க கோரி நிரவ் மோடி தரப்பில் ஏற்கனவே முன்று முறை ஜாமின் கோரப்பட்ட நிலையில், நீதிமன்றம் ஜாமின்  வழங்க,மறுத்து விட்டது. இந்த நிலையில், 4வது முறையாக மீண்டும் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுமீதான விசாரணை .லண்டன் வெஸ்ட் மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. விசாரணையை தொடர்ந்து, நிரவ் மோடிக்கு நீதிபதி இங்கிரிட் சிம்லர் ஜாமின் கொடுப்பாரா அல்லது மனுவை தள்ளுபடி செய்வாரா என்பது தெரிய வரும்.