அருள்மிகு உஜ்ஜைனி காளியம்மன் திருக்கோயில், மாகாளிக்குடி, சமயபுரம், திருச்சி

மத்திய பிரதேசம் உஜ்ஜயினியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்தவர் விக்ரமாதித்தன். காட்டில் ஆறு மாதமும், நாட்டில் ஆறு மாதமும் ஆட்சி செய்வது வழக்கம். இவரது குலதெய்வம் உஜ்ஜயினி மாகாளி. இவளைத்தான் தமிழகத்தில் “உச்சினி மாகாளி, உச்சிமாகாளி” என்று பெயரிட்டு அழைக்கின்றனர்.

ஒரு சமயம் காட்டில் ஆட்சி செய்ய, காவிரிக்கரையிலுள்ள மகாகாளிகுடி காட்டுக்கு, தான் வழிபட்ட காளி சிலையுடன் வந்தார். இங்கே தங்கிப் பூசை செய்து கொண்டிருந்தார். அவர் நாடு திரும்பும்போது, தான் வழிபட்ட சிலையை எடுக்க முயன்றார். முடியவில்லை. அம்பாளைத் தன்னுடன் வரும்படி எவ்வளவோ கெஞ்சினார். அப்போது அவர் முன் தோன்றிய காளி, இந்த இடத்திலும் தனது சக்தி தங்கும் என்று கூறி விட்டாள். அதைத் தொடர்ந்து அம்பாளுக்கு கோயில் கட்டி வழிபாட்டை துவக்கினார்.

ஒருநாள் காளி, “இங்கிருந்து 2 கல் தொலைவில் ஒரு சிவாலயம் உள்ளது. அந்த சிவன் கோயிலில் உள்ள முருங்கை மரத்தில் ஒரு வேதாளம் தொங்கிக் கொண்டிருக்கிறது. அதை நீ கீழே இறக்கினால் அது உனக்கு 32 கதைகளைச் சொல்லும். அதைவென்று அடிமைப்படுத்தினால், உனக்கு எல்லா உதவிகளையும் செய்யும். அதன்படி நீ நடந்தால் உனக்கு உன்னத பதவி கிடைக்கும்” எனக் கூறி மறைந்தாள்.  “வேதாளமும் விக்கிரமாதித்தனும்” கதை நடந்த தலம் இதுதான் என்கின்றனர்.

இந்த கோயிலில் உஜ்ஜைனி காளியம்மனும் காட்சி தருகிறாள். விக்கிரமாதித்தன் இந்த சிலையை இக்கோயிலுக்கு தந்ததாக கூறப்படுகிறது. இதை மெய்ப்பிக்கும் வைகயில் விக்கிரமாதித்தனுடன் வந்த வேதாளமும், விக்கிரமாதித்தனின் மதியுக மந்திரியான கழுவனும் இங்கு வந்துள்ளனர். வேதாளத்திற்கும் கழுவனுக்கும் இங்கு சிலைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. வேறு எந்த தலத்திலும் வேதாளத்திற்கு சிலை கிடையாது. இவர்களில் கழுவனை வழிபட்டால் விடாமுயற்சி செய்யும் தன்மையைப் பெற்று, எதிலும் வெற்றி பெறும் திறன் உண்டாகும். “கழுவன் சாதனை” என்ற வார்த்தை இப்போதும் வழக்கில் உள்ளது.

இதற்கு “தனது நிலையிலேயே நிலைத்திருத்தல், எதற்கும் அசையாமல் இருத்தல்” என்று பொருள். கருவறை விமானம் மாறுபட்ட தோற்றத்துடன், நான்கு மூலைகளிலும் அம்பாளுக்குரிய சிம்மத்திற்குப் பதிலாக ரிடபத்துடன் காணப்படுகிறது. வாயுமூலையில் சுதை வடிவில் முருகப்பெருமானும், அவருக்கு மேலுள்ள விமானத்தில் சீனதேசத்து மனித உருவமும் உள்ளது. இவர் பழநி முருகனுக்கு நவபாஷாண சிலை செய்த போகர் என்கின்றனர். போகர் சீன தேசத்தவராயிருக்கலாம் எனும் ஐயம் இன்னும் உள்ளது.

இங்கு காஞ்சி மகா பெரியவர் அளித்த ஐம்பொன்னால் ஆன நர்த்தன விநாயகர் சிலையும், பஞ்சலோக விநாயகர் சிலை ஒன்றும் உள்ளது.

நோய் தீர்க்கும் தீர்த்தம்:

திருநந்தவனத்தில் சக்தி தீர்த்த கிணறு உள்ளது. இங்கு சிவபெருமான் தவம் செய்வதாகவும், அவரது சடைமுடியின் கங்கையே இந்த தீர்த்தம் என்றும் நம்பப்படுகிறது. இந்தக் கிணற்றின் அடியில் நீரூற்று இல்லாமல், கிணற்றின் பக்கவாட்டு ஊற்று மூலம் தீர்த்தம் பெறப்படுகிறது. இந்த தீர்த்தத்தை தெளித்தால் தோல் நோய், சித்த பிரமை தீர்வதாக நம்பிக்கையுள்ளது. பெண்கள் இந்த தீர்த்தத்தில் நீர் இறைக்க கூடாது ஆண்கள் இறைத்து பெண்களுக்கு வழங்கலாம்.

பெருமாள் சந்நிதி:

அலமேலு மங்கையுடன் பிரசன்ன வெங்கடேசுவரர் இங்கு அருள்பாலிக்கிறார். இவர் வெங்கடேசனாக இருந்தாலும் கையில் கதை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவரை “கதாதரர்” என்றும் அழைக்கின்றனர். மரணபயம் நீக்குபவராக இவர் அருள்கிறார். இவரை வணங்கி வருவதால் அகாலமரணம் ஏற்படாது என்பதும், பூர்ண ஆயுள் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை.

பொதுவாக சிவன் கோயில்களில் மட்டுமே கருவறை விமானத்தின் மீது ஏககலசம் (ஒற்றை கலசம்) இருக்கும். அதுபோல இந்த அம்பாள் கோயிலிலும் ஏககலசம் உள்ளது. அம்மன் கோயில்களில் ஒன்றுக்கு மேற்பட்ட கலசங்கள் இருப்பதே வழமை. இதிலிருந்து சிவனே இங்கு சக்திக்குள் அடங்கியிருக்கிறார் என்பது தெளிவாகிறது.

உற்சவர் அழகம்மை நான்கு கைகளுடன் நின்ற திருக்கோலத்தில் உள்ளார். ஆனந்த சவுபாக்கிய சுந்தரிக்கு மூன்று கைகளே உள்ளன. பொதுவாக அம்மனுக்கு இரண்டு, நான்கு, எட்டு என்ற விதத்தில் கைகள் இருக்கும். ஆனால் ஒற்றைப்படையாக மூன்று கைகள் உள்ள அம்மன் இங்கு மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு கையில் கபாலமும், மற்றொரு கையில் சூலமும், இன்னொரு கையில் தீச்சுடரும் ஏந்தியுள்ளார். அசுரனை வதம் செய்யும் கோலத்தில் இருந்தாலும் முகத்தில் சாந்தம் தவழ்கிறது. கோரப்பல் எதுவும் இல்லை. எனவே இவளை “ஆனந்த சவுபாக்கிய சுந்தரி” என்கிறார்கள்.

அசுரனை வதம் செய்த பிறகு ஏற்பட்ட மகிழ்ச்சியின் அடிப்படையில் இப்படி இருப்பதாக ஐதீகம்.

திருவிழா:

நவராத்திரி பண்டிகை பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. சித்திரை மாதத்தில் அக்னி நட்சத்திரவிழா 21 நாட்கள் நடக்கிறது. பவுர்ணமி, அமாவாசை, மகர சங்கராந்தி, தைப்பூசம், மகாசிவராத்திரி, பங்குனி திருவிழா, அஷ்டமி நாட்களில் விசேட பூசை உண்டு.

திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் பெற, கல்வியில் சிறந்து விளங்க இங்கு பிரார்த்திக்கலாம்.

நேர்த்திக்கடன் :

அம்மனுக்கு அபிசேகம் செய்தும், புத்தாடை அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

வழிகாட்டி:

திருச்சி, சமயபுரத்திற்கு கிழக்கில் ஒரு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது உஜ்ஜயினி காளியம்மன் திருக்கோயில்.