சேலம்

டைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என உதயநிதி கோரிக்கை விடுத்துள்ளார். 

திமுக இளைஞரணி மாநாடு சேலத்தில் நடைபெற்றது.  அதில் திமுக. இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.

அவர் தனது உரையில்,

” ஒருவர் (பிரதமர் மோடி)  ராமேஸ்வரத்தில் 22 கிணறுகளில் நீராடிவிட்டு ராமநாத சுவாமியை நோக்கிப் பார்க்கப் போய்க்கொண்டு இருக்கிறார். நாம் இங்கே மாநில உரிமை காக்க 22 தலைப்புகளில் நம் பேச்சாளர்கள் ஆற்றிய உரை நம்முடைய ராமசாமியை (தந்தை பெரியார்) நோக்கி அமைந்துள்ளது. 

இந்த 10 ஆண்டுக்கால பாசிச ஆட்சிக்கு முடிவு கட்டுவதற்கான படை இங்கிருந்து புறப்படத் தயாராக இருக்கிறது. மாநாடு முடிந்ததும் கருணாநிதி நூற்றாண்டு பணிகளை 100 சதவீதம் செய்து முடிப்போம்.  கருணாநிதியின் மறைவுக்குப் பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக தலைவராகப் பொறுப்பேற்ற போது, ‘எனக்கு ஒரு கனவு இருக்கிறது. மிக மிக முக்கியமாக நாடெங்கும் காவி சாயம் பூச நினைக்கின்ற ‘பாசிஸ்டு’களை வீழ்த்த வேண்டும்’ என்றார். 

முதல்வரின் இந்த கனவை நனவாக்கித் தர வேண்டியதுதான் எங்களது அடுத்த வேலை. இது உதயநிதியின் தனிப்பட்ட லட்சியம் இல்லை. லட்சக்கணக்கான இளைஞர்களின் லட்சியம். நாடு முழுவதும் காவி சாயம் பூச நினைக்கின்ற ‘பாசிஸ்டு’களை வீழ்த்துவதே அந்த லட்சியத்தின் முதல் படி.  அந்த காவி சாயத்தை அழித்துவிட்டு சமூகநீதி வண்ணத்தைப் பூச எல்லோரும் உறுதியேற்று உழைப்போம்.  

நான் இளைஞரணிக்குச் செயலாளராக இருந்தாலும் இந்த அணிக்கு எப்போதும் முதல்வர் தான் செயலாளர். பெயரளவுக்குத்தான் நான் செயலாளர்..இளைஞரணிக்குத் தாயும், தந்தையும், எல்லாமும் நீங்கள்தான். ஆகவே இந்த குழந்தைகளுக்கு நிறையப் பொறுப்பு கொடுத்து நிறைய வேலையும் கொடுங்கள். 

நாடாளுமன்றத் தேர்தலில் தகுதியான இளைஞர்களுக்குப் போட்டியிடுகிற வாய்ப்பை கொடுங்கள். நாங்கள் வெற்றியை உங்களது காலடியில் சமர்ப்பிப்போம்.  இங்கே கூடி உள்ள இளைஞர் படை டில்லியில் கூடியிருக்கக்கூடிய ‘பாசிஸ்டு’ களை விரட்டி அடிக்கப்போவது உறுதி.” 

என்று தெரிவித்துள்ளார்.