மும்பை: ஷிண்டே அணியை சிவசேனா என  தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது ஜனநாயகத்துக்கு ஆபத்தான செயல் என சிவசேனா கட்சி தலைவரான  உத்தவ் தாக்கரே கடுமையாக விமர்சித்துள்ளார்.

உத்தவ்தாக்கரே தனது கொள்கைளுக்கு முரணாக எதிர்க்கட்சிகளுடன் இணைந்து ஆட்சியை நடத்தியதால், சொந்த கட்சி எம்எல்ஏக்களால், ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இதையடுத்து, அதிருப்தி எம்எல்ஏக்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் மீண்டும் ஆட்சியை அமைத்தனர். இது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே வழக்குகள் உள்ளன. சிவசேனா கட்சியின் பெயர் மற்றும் அக்கட்சியின் சின்னமான வில் மற்றும் அம்பு சின்னத்துக்கு ஷிண்டே தரப்பு உரிமை கோரியது.

கட்சியின் பெரும்பான்மை எம்பிக்கள், எம்எல்ஏக்கள் தன்பக்கம் இருப்பதால் தனது அணிக்கு ஒதுக்கும்படி ஷிண்டே கோரினார். இதற்கான கடிதத்தையும் தேர்தல் ஆணையத்திடம் வழங்கினார். உத்தவ் தாக்கரே தரப்பு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேர்தல் ஆணையத்திடம் தாங்கள் தான் உண்மையான சிவசேனா என்று வாதத்தை முன்வைத்தது.

இருதரப்பு விளக்கங்கள், ஆவணங்கள் மற்றும் கட்சி விதிகளை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம் சிவசேனா கட்சியும், கட்சி சின்னமான வில்-அம்பும் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு வழங்கி உத்தரவிட்டுள்ளது. சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ தலைவராக ஏக்நாத்ஷிண்டேவை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து உள்ளது. இது தாக்கரே குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை,

இதற்கு உத்தவ் தாக்கரே கண்டனம் தெரிவித்துள்ளார். ஷிண்டே அணிக்கு சிவசேனா கட்சியும், சின்னமும் வழங்கப்பட்டது ஜனநாயக படுகொலை  என்றவர், தேர்தல்ஆணைய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர உள்ளதாக கூறிய உத்தவ் தாக்கரே,  சிவசேனா சின்னத்தை திருடிவிட்டனர். தனது திருட்டால் இப்போதைக்கு ஷிண்டே மகிழ்ச்சியாக இருக்கலாம். ஒருமுறை துரோகி என்றால், எப்போதுமே துரோகிதான். நாங்கள் போராடுவோம். நம்பிக்கையை இழக்கவேண்டாம் என தனது ஆதரவாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உத்தவ்தாக்கரே அதிர்ச்சி: சிவசேனா கட்சி என ஷிண்டே அணியை அங்கீகரித்தது தேர்தல் ஆணையம்…