மும்பை

ரூ.1.1 லட்சம் கோடி மதிப்பிலான புல்லட் ரெயில் திட்டத்தை பரிசீலனை செய்ய உள்ளதாகக்  கூறிய மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே பணிகளை நிறுத்தி உள்ளார்.

பிரதமர் மோடியின் கனவுத் திட்டம் எனக் கூறப்படும் மும்பை – அகமதாபாத் புல்லட் ரெயில் திட்டம் ரூ.1.1 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு வருகிறது.    இந்த திட்டத்துக்கான செலவில் 81% வரை ஜப்பான் வங்கி 50 ஆண்டு கால கடனாக அளிக்கிறது.   அத்துடன் மகாராஷ்டிர அரசு ரூ.5000 கோடியும் குஜராத் அரசு ரூ.5000 கோடியும் அளிக்கின்றனர்.  மத்திய அரசு ரூ.10000 கோடி அளிக்க உள்ளது.

இந்த திட்டம் ஆரம்பம் முதலே சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.    முந்தைய ஆட்சியில்  பாஜக மற்றும் சிவசேனா ஆகிய இரு கட்சிகளுமிணைந்திருந்த போதிலும்  சிவசேனா ஒவ்வொரு கட்டத்திலும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது.   இந்த திட்டத்துக்கான 1380 ஹெக்டேர் நிலத்தில் இதுவரை 548 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.  இந்த திட்டம் வரும் 2023ல் முடியும் என கூறப்பட்டிருந்தது.

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, “தற்போது மாநிலத்தில் நிதிப்பற்றாக்குறை அதிக அளவில் உள்ளது.  பல நலத் திட்டங்களுக்குத் தேவையான நிதி இல்லை என கூறப்படுகிறது.   விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்ய அதிக அளவில் நிதி தேவைப்படுகிறது.  ஆகவே அரசின் நிதி நிலை குறித்து உடனடியாக ஆய்வு செய்ய வேண்டி உள்ளது.

இந்நிலையில் புல்லட் ரெயிலுக்கு அதிக அளவில் நிதி தேவை உள்ளது.  எனவே தற்போது மாநில மேம்பாட்டுப் பணிகள் குறித்த விவரங்களைக் கேட்டுள்ளோம்.  இதில் நடைபெறும் பணிகள்,  திட்ட மதிப்பீடு,  இதில் உள்ள இடைஞ்சல்கள், மற்றும் முடிக்க வேண்டிய தேதி ஆகியவற்றைக் கேட்டுள்ளோம்.  இதன் பிறகு எது உடனடியாக முடிக்க வேண்டுமோ அதற்குத் தேவையான நிதியை ஒதுக்க உள்ளோம்.  அதுவரை புல்லட் ரெயில் திட்டம் நிறுத்தி வைக்கப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.