சேலம்: 
சேலத்தில் நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்த மாணவன் தனுஷின் உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினர். நேரில் அஞ்சலி செலுத்தினார்.
நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், சித்தா, ஆயுர்வேதா போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் 18 மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்ட மையங்களில் 1,12,889 மாணவர்கள் இன்றைக்கு நீட் தேர்வினை எழுத உள்ளனர். இதற்கிடையில், நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த சேலம் மாவட்டம், கூளையூரைச் சேர்ந்த தனுஷ் என்னும் 19 வயது மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனுஷ் தற்கொலை செய்தி அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், தேர்வு அச்சத்தில் மாணவர் தனுஷ் தற்கொலை செய்து கொண்ட செய்தியறிந்து வேதனை அடைந்தேன்.  தமிழ்நாடு சட்டப்பேரவையில் நாளை நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிராகத்  தீர்மானம் நிறைவேற்றப்படும்  என்றும், இதனை இந்தியத் துணைக்கண்டத்தின் பிரச்சினையாகக் கருதி அணைத்து மாநில முதல்வர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்று ஆதரவு திரட்டி வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்த மாணவன் தனுஷின் உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினர். நேரில் அஞ்சலி செலுத்தியதுடன், அந்த மாணவனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.