விநாயகரை வைத்து விளையாட நினைக்கும் பா.ஜ.க. வினரை காவல் துறை கண்டுகொள்ளாதது ஏன் ?

Must read

 

விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கடந்த 10 ம் தேதி பல்வேறு மாநிலங்களில் அந்தந்த மாநில கலாச்சாரப் படி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

கொரோனா காரணமாக மக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று மாநில அரசுகளை ஒன்றிய அரசு கேட்டுக்கொண்டதன் பெயரில், அனைத்து மாநிலங்களும் அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்திருந்தது.

தற்காலிக தண்ணீர் தொட்டிகளாக மாறிய லாரிகளில் சிலை கரைப்பு – இடம் பெங்களூரு

பா.ஜ.க. ஆளும் மாநிலமான கர்நாடக தலைநகர் பெங்களூருவில் இந்த ஆண்டு பொது இடங்களில் சிலைகள் வைக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதோடு, வழக்கம் போல் நகரின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள முக்கிய மைதானங்களில் லாரிகளில் தார்பாலின் வைத்து கட்டி தொட்டி போல் அமைத்து தண்ணீர் தேக்கி, இந்த தொட்டிகளில் விநாயகர் சிலையை கரைக்க ஏற்பாடு செய்திருந்தனர்.

வீடுகளில் வைத்து விநாயகருக்கு விசேஷ பூஜை நடத்தியவர்கள், மாலையில் இந்த சிலைகளை கொண்டு வந்து இந்த தண்ணீர் தொட்டி லாரிகளில் கரைத்து குதூகலமாக கொண்டாடினர்.

இந்நிலையில், தமிழக பா.ஜ.க. பொறுப்பாளரான கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. தலைவர் சி.டி. ரவி, தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு படத்தை பதிவிட்டு, ஆந்திராவில் விநாயகர் சிலைகள் குப்பை லாரிகளில் ஏற்றிச் செல்லப்படுவதாக பதிவிட்டார்.

இது தடையை மீறி ஆங்காங்கே வைக்கப்பட்டு லாரிகளில் ஏற்றிசெல்லப் பட்ட சிலைகளா அல்லது வேறு என்ன காரணம் என்று கூட அறியாமல் பதிவிட்ட இந்த படத்தை, தமிழகத்தைச் சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகி எஸ்.ஆர். சேகர் உள்ளிட்ட சிலர் பகிர்ந்ததோடு, இது தமிழகத்தில் நிகழ்ந்ததை போல் சித்தரித்திருந்தனர்.

இது ஆந்திராவில் நடந்ததாக சி.டி. ரவி பதிவிட்டிருப்பதை சுட்டிக்காட்டிய பின் தனது விநாயகர் சிலை குறித்த பதிவை எஸ். ஆர். சேகர் நீக்கினார்.

இருந்தபோதும், மாநில நிர்வாக குழுவைச் சேர்ந்த சௌதா மணி உள்ளிட்ட சிலர் இந்த பதிவை மீண்டும் பதிவிட்டு வருகின்றனர்.

மதம், வழிபாடு போன்ற மக்கள் நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் பா.ஜ.க. வினர் இது போன்ற ஆதாரமில்லாத பதிவுகளை போடுவதும் பின்பு நீக்குவதும் தொடர்ந்து நடைபெறும் நிலையில் விஷம பிரச்சாரம் மேற்கொண்டு வரும் இவர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் கோரிக்கை எழுந்து வருகிறது.

More articles

Latest article