டில்லி

பேர் நிறுவனம் தனது சர்வதேச 10% ஆட்குறைப்பு நடவடிக்கையின்படி இந்தியாவில் 350 பேருக்கு லே ஆஃப் அளித்துள்ளது.

சான் ஃப்ரான்சிஸ்கோவை சேர்ந்த உபேர் நிறுவனம் சர்வதேச அளவில் உலகில் பல நாடுகளில் இயங்கி வருகிறது.  இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இந்நிறுவனம் உபேர் டாக்ஸி, உபேர் ஈட்ஸ் எனப் பல துறைகளில் இயங்கி வருகிறது.   கடந்த சில மாதங்களாக இந்நிறுவனம் நஷ்டத்தைச் சந்தித்து வருகிறது.   சென்ற காலாண்டில் உலகெங்கும் இணைந்து 500 கோடி டாலர் நஷ்டத்தை அடைந்ததாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நஷ்டத்தை சரிக்கட்டப் பல நடவடிக்கைகளை உபேர் நிறுவனம் எடுத்து வருகிறது.  இந்தியாவில் உள்ள உபேர் ஈட்ஸ் என்னும் உணவு வழங்கும் நிறுவனத்தை ஸ்விக்கி, அமேசான்  போன்ற நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய முயன்றதாகவும், விலை சரிப்பட்டு வராததால் இந்த விற்பனை கைவிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் உபேர் நிறுவனத்தின் இரு தலைமை அதிகாரிகளான பவிக் ராதோட் மற்றும் தீபக் ரெட்டி ஆகியோர் பதவி விலகி உள்ளனர்.   இது உபேர் நிறுவனத்துக்கு மேலும் சிக்கலை உருவாக்கி உள்ளது.  எனவே தனது உட்கட்டமைப்பை மாற்றி செலவைக் குறைக்க உபேர் நிறுவனம் முடிவு எடுத்துள்ளது.

உலகெங்கும் உள்ள அனைத்து உபேர் ஊழியர்களில் 10% பேருக்கு லெ ஆஃப் (வேலை இன்மை அறிவிப்பு) அளிக்க முடிவு செய்துள்ளது.   அதன்படி இந்தியாவில் அனைத்து உபேர் நிறுவனங்களிலும் இணைந்து 350 பேர் வரை வேலை இழந்துள்ளனர்.  எந்தெந்த துறையில் இந்த லே ஆஃப் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறித்த முழு விவரங்களை நிறுவனம் அளிக்கவில்லை.