டில்லி

ந்தியாவில் 10% பொருளாதார வளர்ச்சியை அடைய பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி வழிமுறைகள் தெரிவித்துள்ளார்.

பாஜகவின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி தனது கருத்துக்களை வெளிப்படையாகக் கூறி பல சர்ச்சைகளைச் சந்தித்துள்ளார்.    அவர் இந்தியப் பொருளாதாரம் கடுமையாக சீர்குலைந்துள்ளதால் மறு சீரமைப்பை மேற்கொள்ள வேண்டும் எனவும் 10% வளர்ச்சியை எட்டினால் மட்டுமே இந்த சீரமைப்பை அடைய முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த 10% வளர்ச்சிக்காக சுப்ரமணியன் சுவாமி தெரிவிக்கும் வழிமுறைகள்  பின்வருமாறு :

ஒவ்வொரு தனி மனிதருக்கும் அரசு சலுகைகள் அளித்து ஊக்குவிக்க வேண்டும்.  உதாரணமாக வருமான வரி ஒழிப்பு  அதாவது வரிகளைச் சீரமைப்பதற்குப் பதில் முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும்.    அதற்குப் பதிலாக வருமானத்தில் குறிப்பிட்ட பகுதியைக் கட்டாய சேமிப்பாக வங்கிகளில் முதலீடு செய்ய வேண்டும் என உத்தரவிடலாம்.

வருமானத்தில் இருந்து சேமிப்பது கடந்த 2014 ஆம் வருடத்தில் இருந்து குறைந்து வருகிறது.   இதனால் வர்த்தக முதலீட்டுக்கான நிதி அளிக்கும் அளவுக்கு வங்கிகளில் நிதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.   நாட்டின் உற்பத்தியை அதிகரிக்க தற்போதுள்ள  29 சதவிகித முதலீடுகள் எண்ணிக்கையில் இருந்து 39 சதவிகிதம் ஆக்க வங்கியில் வாடிக்கையாளர்கள் முதலீடு செய்வதை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

வருமானத்தில் அல்லாத சேமிப்புக்கள் தற்போது ஜிடிபியில் 5% மட்டுமே உள்ளன.  எனவே வங்கி வைப்பு நிதிக்கு அளிக்கப்படும் வட்டி விகிதம் 9%க்கு குறையாமல் இருக்க வேண்டும்.  இதன் மூலம் அனைத்துத் தரப்பினரும் சேமிக்கத் தொடங்குவார்கள்.

இவ்வாறு சேமிப்பை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கும் போது அந்த நிதியைக் கொண்டு தொழில் முனைவோர் கடன் பெறத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.   இதற்காக வங்கிக் கடன் வட்டிகள் 9% க்கு மேற்படாமல் இருக்க வேண்டும்.   அது மட்டுமின்றி கடன் அளித்த பணம் வங்கிகளுக்குத் திரும்பக் கிடைக்கும் என்னும் உறுதியை வங்கிகள் பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயம் போன்ற இந்தியாவின் அடிப்படைத் தொழில் செய்வோருக்கு போதுமான அளவுக்கு லாபம் கிடைக்க அரசு வழி செய்ய வேண்டும். அத்துடன் கரன்சி நோட்டுப் புழக்கம் தேவையான அளவுக்கு இருந்தால் மட்டுமே ஊழியர்களுக்குக் குறித்த நேரத்தில் ஊதியம் கிடைக்கும்.   உற்பத்தி அதிகரிப்புக்கு இது மிகவும் முக்கியமாகும்.    எனவே தேவையான அளவு கரன்சிகளை அச்சடித்து புழக்கத்தில் விட அரசு முன் வர வேண்டும்

என சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.