கொல்கத்தா: அபிஜித் பானர்ஜி மற்றும் சவுரவ் கங்குலி ஆகியோர் மேற்குவங்க மாநிலத்திற்குப் பெருமை சேர்த்துள்ளதாய் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மகிழ்ச்சித் தெரிவித்துப் பாராட்டியுள்ளார்.

இந்தாண்டு உலகளவில் மொத்தம் 3 பேருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. எஸ்தர் டூப்லோ, மைக்கேல் கிரீமர் மற்றும் அபிஜித் பானர்ஜி ஆகிய மூவரில், மூன்றாம் நபர் இந்தியர் என்பதும், அவரின் பெயரை வைத்தே அவர் வங்கத்தைச் சேர்ந்தவர் என்பதும் நாமெல்லாம் அறிந்ததே.

அபிஜித் பானர்ஜி கொல்கத்தாவில் பிறந்தவர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த சவுரவ் கங்குலி, தற்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரும் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்.

எனவே, இவர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்துப் புகழாரம் சூட்டியுள்ள அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, இவர்களால் மேற்கு வங்க மாநிலம் பெருமையடைவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், மாநிலம் வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.