துபாய்

துபாய் நகரில் எக்ஸ்போ கட்டுமான பணி விபத்தில் 5 பேர் மரணம் அடைந்ததை அமீரக அரசு முதல் முறையாக் ஒப்புக் கொண்டுள்ளது.

நேற்று முன் தினம் உலகின் மிகப் பிரமாண்டமான வர்த்தக கண்காட்சியான துபாய் எக்ஸ்போ 2020 தொடங்கியது.  இதில் இந்தியா உள்ளிட்ட 192 நாடுகள் பங்கு பெற்றுள்ளன.  இந்த கண்காட்சியில் இந்தியா தனது 4 மாடிகள் கொண்ட பிரம்மாண்ட அரங்கத்தை ரூ.400 கோடி செலவில் அலுவலக அமைப்புடன் நிரந்தர கட்டிடமாக அமைத்துள்ளது.

கடந்த 2019 ஆம் வருடம் முதல் இந்த வளாகத்தை அமீரக அரசு கட்டி வந்தது.  இங்கு தினசரி உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 2 லட்சம் ஊழியர்கள் பணி புரிந்தனர்.   இதைக் கட்ட 24 கோடி மணி நேர மனித உழைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளன.  இந்த கட்டுமான பணியின் போது அதிக அளவில் விபத்துக்கள் நடந்ததாகவும் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பாஸ்போர்ட்டுகள் பறிக்கப்பட்டு மனித உரிமைகள் மீறப்பட்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

இது குறித்துப் பல நாடுகள் விபத்துக்கள் விவரங்களை கேட்டும் அமீரக அரசு மவுனமாக இருந்தது.  இதையொட்டி ஐரோப்பியக் கூட்டமைப்பைச் சேர்ந்த  27 நாடுகள் இதில் பங்கேற்க மாட்டோம் என அறிவித்தது.  அந்தந்த நாட்டு நாடாளுமன்றங்களிலும் இது குறித்த தீர்மானம் இயற்றப்பட்டன.    நேற்று முன் தினம் கண்காட்சி தொடக்கத்தையொட்டி அமீரக அரசு வாய் திறந்துள்ளது.

இந்த கண்காட்சியின் தகவல் தொடர்பாளர் ஸ்கோனாய்ட் மெக்ஜியாசின் ஒரு பேட்டியில், “இந்த வளாகக் கட்டுமானப்பணியில் 2 லட்சம் பேர் பணி புரிந்துள்ளனர்.  சுமார் 24 கோடி மணி நேர மனித உழைப்பில் இந்த வளாகம் உருவாகி உள்ளது.  கட்டுமானப் பணியின் போது நடந்த விபத்துகளில் 5 தொழிலாளர்கள் உயிர் இழந்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.  ஆயினும் விபத்து குறித்த விவரங்களை வெளியிட அவர் மறுத்துள்ளார்.