சென்னை: பராமரிப்பு பணி காரணமாக  நாளை (29ந்தேதி)  முதல் கடற்கரை – தாம்பரம்  மின்சார ரயிலின் நள்ளிரவு சேவைஇரண்டு வாரம் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சென்னையில் பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்வதில், புறநகர் ரயிசேவை பெரும் பங்காற்றி வருகிறது. அதுபோல மெட்ரோ ரயில் சேவையும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  இதன்மூலம் சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து நகர்ப்புறங்களின் வேலைக்கு வருவோர், அலுவலகம் செல்வோர், கல்லூரி மாணவ, மாணவிகள் என தினமும் லட்சக்கணக்கானோருக்கு பேருதவியாக இருந்து வருகிறது. தினசரி பல  ஆயிரக்கணக்கானோர் இந்த புறநகர் ரெயிலில் பயணித்து வருகின்றனர். இந்த ரயில் சேவை சில மணி நேரம் முடங்கினாலே பொதுமக்களின் பரிதவித்து வருகின்றனர். இருந்தாலும் தண்டவாளம் மற்றும் சிக்னல் உள்பட பல்வேறு பராமரிப்பு பணி காரணமாக, இரவு நேரங்களில் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படும்.

இந்த நிலையில், தற்போது பராமரிப்பு பணிகள் காரணமாக  தாம்பரம் கடற்கரை இடையே இரவு ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக  தெற்கு ரயில்வே சென்னை கோட்டம்  அறிவித்து உள்ளது.

இதுகுறித்து, வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,  ”பயணிகளின் பாதுகாப்பு கருதி தாம்பரம் ரயில் நிலையத்தில் நாளை (நவ.29) முதல் டிச.14-ம் தேதி வரை நள்ளிரவு 12.25 முதல் அதிகாலை 2.25 வரை பொறியியல் வேலைகள் மற்றும் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதனால், அந்த நாள்களில் சென்னை கடற்கரையிலிருந்து இரவு 11.59 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரயிலும், மறுமார்க்கமாக தாம்பரத்திலிருந்து இரவு 11.40 மணிக்கு கடற்கரைக்கு செல்லும் ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.