போபால்: ஆசிய சிங்கங்களை இடமாற்றம் செய்வதில், குஜராத் மற்றும் மத்தியப் பிரதேச மாநில அரசுகளுக்கிடையில் தொடர்ச்சியாக மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன.

குஜராத் மாநிலத்திலுள்ள கிர் காட்டுப் பகுதிதான், இந்தியாவில் சிங்கங்கள் வாழும் ஒரே பகுதியாகும். இங்குதான் ஆசிய சிங்கங்கள் வாழ்கின்றன. ஆனால், சமீப ஆண்டுகளில் இந்தப் பகுதியில் சிங்கங்களின் இறப்புகள் அதிகளவில் நிகழ்கிறது.

கடந்த 2013ம் ஆண்டு, கிர் பகுதியிலிருந்து சிங்கங்களை மத்தியப் பிரதேசத்தின் குனோ பால்பூர் வனவிலங்கு சரணாலயத்திற்கு இடமாற்றம் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தது. ஆனால், குஜராத் அரசு அதுதொடர்பான நடவடிக்கைகள் எதையும் இதுவரை எடுக்கவில்லை.

இதுகுறித்துப் பேசிய மத்தியப் பிரதேச வனத்துறை அமைச்சர், “கடந்த 2 ஆண்டுகளில் குஜராத்தின் கிர் பகுதியில் சிங்கங்களின் இறப்பு விகிதம் அதிகரித்த போதிலும், எதற்காக குஜராத் அரசு சிங்கங்களை மத்தியப் பிரதேசத்திற்கு அனுப்பாமல் இருக்கிறது? உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட இத்தனை ஆண்டுகளில், ஒரு சிங்கம்கூட இதுவரை மத்தியப் பிரதேசத்திற்கு வந்து சேரவில்லை” என்றார்.

அதேசமயம், இதற்கு பதிலளிக்கும் விதத்தில் பேசிய குஜராத் வனத்துறை அமைச்சர், “நாங்கள் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி செயல்பட்டு வருகிறோம். நாங்கள் இதுவரை எந்த சிங்கத்தையும், எந்த மாநிலத்திற்கும் மாற்றவில்லை. பிராந்தியம், உணவு மற்றும் காலநிலை போன்ற அம்சங்களை கருத்தில்கொண்டே எதையும் செய்ய வேண்டியுள்ளது” என்றார்.