டில்லி:

இந்திய ராணுவத்தின் தொழில்நுட்ப சேவை பிரிவின் உயர் ரகசிய உளவு பிரிவு கமாண்டிங் அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் கர்னல் ஹன்னி பாக்ஷி. இந்த பிரிவு 26/11 மும்பை தாக்குதலுக்கு பின்னர் 2010ம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

நாட்டிற்குள்ளேயும், வெளியேயும் உளவு பார்க்கும் பணியில் இந்த பிரிவு ஈடுபட்டது. இதை ராணுவ முன்னாள் தளபதி வி.கே.சிங் தொடங்கினார். ராணுவ தளபதிகள் பிக்ராம் சிங், தால்பீர் சிங் சுஹக் ஆகியோருக்கு எதிராக இந்த உளவுப் பிரிவு செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

வி.கே.சிங் ஓய்வுக்கு பின் இப்பிரிவு கலைக்கப்பட்டது. பிரிவின் செயல்பாடு குறித்து விசாரிக்க ராணுவம் மற்றும் அதிகாரிகள் குழு சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்தது. பின்னர் இதை அரசு ரத்து செய்தது. இந்த விவகாரம் தொடர்பாக ஹன்னி பாக்ஷி மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை ராணுவ நீதிமன்ற விசாரணைக்கு பாக்ஷி அழைக்கப்பட்டார். அப்போது இவர் மீதான விசாரணையை தொடர்வது ராணுவ விதிகளுக்கு பொருத்தமற்றது என்று கூறி அவரை நீதிமன்றம் விடுவித்தது. இந்நிலையில் பாக்ஷியின் மனைவி அபர்னா ஒரு செய்தி நிறுவனத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ‘‘ இந்த விவகாரத்தில் ராணுவத்தின் முன்னாள் தளபதிகள் 2 பேர் மற்றும் முன்னாள் ராணுவ கமாண்டர் ஆகியோர் எனது கணவருக்கு சிரமத்தை ஏற்படுத்தியதோடு, எனக்கும் தொல்லை கொடுத்தார்கள். எனது கணவரின் நிலை குறித்து ராணுவ அமைச்சருக்கு கடிதம் எழுதியதால் என்னையும் நீதிமன்ற விசாரணைக்கு அழைத்து மிரட்டினார்கள்’’ என்றார். அந்த ராணுவ அதிகாரிகளின் பெயர்களை அவர் வெளியிடவில்லை.

மேலும் அவர் கூறுகையில், ‘‘தற்போதைய ராணுவ தளபதி பிபின் ராவத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது கணவர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக நியாயமான விசாரணை நடத்த அவர் உறுதியளித்தார். இதன் மூலம் முன்னாள் உளவு அதிகாரியான எனது கணவர் மீது யாரும் குற்றம் கூற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது’’என்றார்.