டில்லி:

சந்திராயன்-2 செயற்கைகோளை விண்ணில் ஏவும் திட்டம் அக்டோபர் முதல் வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

வரும் ஏப்ரல் 23ம் தேதி சந்திராயன்-2 செயற்கைகோளை விண்ணில் ஏவ இஸ்ரோ முடிவு செய்திருந்தது. இதை அக்டோபர் முதல் வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளது. துல்லிய இலக்கை நிர்ணயம் செய்ய கால அவகாசம் தேவைப்படுவதால் இந்த மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இஸ்ரோ தலைவர் டாக்டர் கே.சிவன் கூறுகையில்,‘‘அனைத்து பரிசோதனைகளும் முடிவடையும் வரை விண்ணில் செலுத்துவதை ஒத்தி வைக்க வேண்டுமென குழு பரிந்துரை செய்துள்ளது. இந்த குழுவில் இஸ்ரோ தலைவர், விண்வெளி வல்லுனர்கள், ஐஐடி பேராசிரியர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஏப்ரலுக்கு பின்னர் மே முதல் செப்டம்பர் வரையிலான கால கட்டத்தில் முழு சந்திர நாளை கிரகணங்கள் காரணமாக ஆராய்ச்சிக்கு பயன்படுத்த முடியாது. இதனால் தான் அக்டோபர் முதல் வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.