டில்லி:

எஸ்பிஐ.யை தவிர இதர பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க வேண்டும் என்று நிதி ஆயோக் முன்னாள் துணைத் தலைவர் அரவிந்த் பனகரியா தெரிவித்துள்ளார். இதை 2019 தேர்தல் அறிக்கையில் அரசியல் கட்சிகள் வெளியிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொலும்பியா பல்கலைக்கழகத்தில் பொருளாதார துறை பேராசிரியராக தற்போது அரவிந்த் பனகரியா பணியாற்றி வருகிறார். பொதுத் துறை வங்கிகளில் தற்போது எழுந்துள்ள செயல்படாத சொத்துக்களின் மோசடி தான் தனியார் மயத்துக்கான முக்கிய காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும், கூறுகையில், ‘‘தனியார் வங்கிகள் கடன் வழங்கும் விவகாரங்களில் பொதுத் துறை வங்கிகளை விட சிறப்பாக செயல்படுகிறது’’ என்றார்.

அமெரிக்காவுடனான வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள திடீர் பதற்றம் குறித்து அவர் கூறுகையில்,‘‘இந்தியாவுடனான வர்த்தகத்தை தளர்த்த டிரம்ப் தயக்கம் காட்டினால் அது ஆபத்தை ஏற்படுத்தும். இந்தியாவின் பொருட்களு க்கு அமெரிக்காவின் சந்தை மூடப்படுகிறது என்று தான் அர்த்தம்’’ என்றார்.

நம் நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டம் குறித்து அவர் கூறுகையில்,‘‘ நல்ல சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் உற்பத்தி துறையின் வளர்ச்சி அத்தியாவசியமானது. இதன் மூலம் தான் வேலையில்லா திண்டாட்டத்தில் இருந்து தப்ப முடியும். தற்போது குறுகிய அளவிலான வேலைவாய்ப்புகள் தான் உருவாக்கப்படுகிறது. இது நம் நாட்டில் உள்ள தொழிலாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் அளவில் இல்லை’’ என்றார்.

‘‘கடந்த 2 காலாண்டுகளாக நாட்டின் மொத்த உற்பத்தி அதிகரித்து வருகிறது. 2017-18ம் ஆண்டில் முதல் காலாண்டில் 5.7 சதவீதமாக வளர்ச்சி இருந்தது. இது 2வது காலாண்டில் 6.5 சதவீதமும், 3வது காலாண்டில் 7.2 சதவீதமாகவும் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த மேல் நோக்கிய வளர்ச்சி தொடரும் என்று எதிர்பார் க்கப்படுகிறது’’என்றார்.