புதுடெல்லி:

குடிமக்களின் சமூக தள ஊடக உரிமைகள் குறித்து விசாரிக்க, ட்விட்டர் நிறுவன அதிகாரிகளை வரும் 11-ம் தேதி நேரில் ஆஜராக நாடாளுமன்ற விசாரணைக் குழு சம்மன் அனுப்பியுள்ளது.


ட்விட்டர், முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் இடது சாரி கொள்கையுடையவர்களின் பதிவுகள் மட்டும் இடம் பெறுவதாகவும், வலது சாரிகளின் கருத்துகள் நீக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து தகவல் தொழில்நுட்ப நாடாளுமன்ற விசாரணைக் குழுவிடம் சிலர் புகார் கொடுத்தனர்.
ட்விட்டர், முகநூல் ஆகியவை பாரபட்சமாக செயல்படுவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

இது குறித்து விளக்கம் அளிக்க பிப்ரவரி 11-ம் தேதி பிற்பகல் 3 மணியளவில் நேரில் ஆஜராகுமாறு, ட்விட்டர் நிறுவன அதிகாரிகளுக்கு நாடாளுமன்ற விசாரணைக் குழு தலைவரும் பாஜக எம்பியுமான அனுராக் தாக்கூர் சம்மன் அனுப்பியுள்ளார்.

இந்த விசாரணையின்போது, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அதிகாரிகளும் ஆஜராக வேண்டும் என்றும் அனுராக் தாக்கூர் கேட்டுக் கொண்டுள்ளார்.

பாரபட்சமாக செயல்படுவதாகக் கூறி சில நாட்களுக்கு முன்பு ஒரு பிரிவினர் ட்விட்டர் நிறுவனம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

s.