சென்னை: வேளச்சேரி பகுதியில்  இருசக்கர வாகனத்தில் எடுத்துச்செல்லப்பட்ட விவிபாட் இயந்திரத்தில் 15 வாக்குகள் பதிவாகி இருந்தது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. இது புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஏப்ரல் 6ந்தேதி வாக்குப்பதிவுக்கு முந்தைய நாளான ஏப்ரல் 5ந்தேதி அன்று மாலை  தரமணி அருகே  மர்ம நபர்கள்  ஸ்கூட்டரில் விவிபாட் இயந்திரத்தை எடுத்தச்சென்றனர். இதைக்கண்ட பொதுமக்கள்  அவர்களை மடக்கி பிடித்தனர். வாக்குப்பதிவு இயந்திரத்தை, காவல்துறை பாதுகாப்பு இல்லாமல் எங்கே எடுத்துச் செல்கிறீர்கள் என சரமாரியாக கேள்வி எழுப்பினர். இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து விளக்கம் அளித்த தேர்தல் ஆணையம் சென்னை மாநகராட்சி ஊழியர் ஒருவர், ஒரு வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம், ஓட்டு சரிபார்க்கும் விவிபாட் உள்ளிட்டவற்றை இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் சென்றதாகவும், அவருக்கு துணையாக, மேலும் இரண்டு ஊழியர்கள் சென்றதாகவும் தேர்தல் ஆணையம் கூறியது. மேலும்,  அந்த வாக்குப்பதிவு எந்திரம் வாக்குப்பதிவுக்காக பயன்படுத்தப்பட்டது அல்ல என்றும் அவசர தேவை ஏற்பட்டால் பயன்படுத்துவதற்காக, ரிசர்வ் செய்து வைக்கப்பட்ட ஒன்று என்றும்  விளக்கம் அளித்தது. மேலும், இதுகுறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் கூறியது.
ஆனால், தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை அரசியல் கட்சிகள் ஏற்க மறுத்தன. பயன்படுத்தப்படாத வாக்குப்பதிவு இயந்திரமாக இருந்தாலும், ஏன் பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்படாமல், இரு சக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது என்று கேள்வி எழுப்பப்பட்டு வந்தது.
ஆனால், தற்போது இந்த விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.   ஸ்கூட்டரில் எடுத்துச்செல்லப்பட்ட வாக்கு பெட்டியில் 15 வாக்குகள் இருந்தாகவும், அந்த வாக்குப்பதிவு இயந்திரம்  50 நிமிடங்கள் செயல்பாட்டில் இருந்துள்ளது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, வேளச்சேரி தொகுதியில் மறு வாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும் என சிலர் கோரி வருகின்றனர்.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சத்தியபிரதா சாகு, ஸ்கூட்டரில் எடுத்துச் செல்லப்பட்டது பழுதான மற்றும் 2 மாற்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் தான் என்று தெரிவித்தார். மேலும் இந்த விவகாரத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி உதவி பொறியாளர் உள்பட 4 பேருக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளதாக அவர் கூறினார்.
 அந்த விவிபேட் இயந்திரத்தில் 15 வாக்குகள் பதிவாகி இருந்ததாக தெரிவித்த சத்யபிரத சாகு, அந்த விவிபேட் இயந்திரம் 50 நிமிடம் பயன்பாட்டில் இருந்தகாகவும், அதில் மொத்தம் 15 ஒப்புகை சீட்டுக்கள் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, இரு சக்கர வாகனத்தில் விவிபேட் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு சென்றது தேர்தல் விதிகளுக்கு எதிரானது என்றும், வேளச்சேரி தொகுதியில் மறுவாக்குப்பதிவு நடத்தப்படுமா? என்பது குறித்து தலைமை தேர்தல் தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா,  விதி மீறிய ஊழியர்களை பின்னால் இருந்து இயக்கியவர்கள் யார் என்பதை கண்டறிய தீவிர விசாரணை தேவை என வலியுறுத்தியுள்ளளார்.மேலும், இதற்கான  சூத்திரதாரிகளை கண்டறியாமல் மறுவாக்குப் பதிவு நடத்துவது கண்துடைப்பு என விமர்சனம் செய்துள்ளார்.

வேளச்சேரி தொகுதியில்  அதிமுக சார்பில் எம்.கே.அசோக் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக கூட்டணியைச் சேர்ந்த  காங்கிரஸ் கட்சி  சார்பில் ஜே.எம்.ஹெச்.அசன் மவுலானாவும், அமமுக சார்பில் எம்.சந்திரபோஸ், மநீம சார்பில் சந்தோஷ்பாபு உட்பட மொத்தம் 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அங்கு தொகுதியை கைப்பற்றுவதில்,  அதிமுக – காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவியது குறிப்பிடத்தக்கது.