சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் சென்னை மெரீனா கடற்கரையில் விஜய்க்கு ஆதரவாக போராட்டம் நடத்தவுள்ளதாக வெளியான தகவலையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையான மெரினாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அதிக இடங்களை பிடித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரியும், பெரும்பான்மை இல்லை என கூறி ஆட்சி அமைக்க அழைக்காத ஆளுநருக்கு எதிராக தவெகவினர் போராட்டம் நடத்தப்போவதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, மெரினாவில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தொங்கு சட்டமன்றம் அமைந்துள்ளது. ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையான எம்எல்ஏக்கள் இல்லாததால், தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பதவியேற்பதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வருகிறது.
நடைபெற்று முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆட்சியமைக்க 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை. தமிழகத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியமைக்க காங்கிரஸ் (Congress) கட்சி சில நிபந்தனைகளுடன் ஆதரவு தெரிவித்தது. சட்டமன்றத்தில் மட்டுமின்றி அடுத்து வரவுள்ள உள்ளாட்சி, மக்களவை, மாநிலங்களவைத் தேர்தல்களிலும் த.வெ.க – காங்கிரஸ் கூட்டணி தொடரும் என காங்கிரஸ் அறிவித்தது. தவெக வின் 108 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் காங்கிரசைச் சேர்ந்த 5 எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 113 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைத்தது.
இந்நிலையில் தமிழக ஆளுநர் அர்லேகரை சந்தித்து, விஜய் நேற்று மாலை ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது அவர், த.வெ.க.வின் 108 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் காங்கிரசைச் சேர்ந்த 5 எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 113 எம்.எல்.ஏ.க்க ளின் பட்டியலை வழங்கினார்.ஆனால் அதை பெற்றுக்கொண்ட கவர்னர், 118 எம்.எல்.ஏ.க்கள் பெயர் பட்டியலை கொண்டு வந்தால்தான் ஆட்சி அமைக்க அனுமதிக்க முடியும் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். இதனால் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்க முடியாத நிலை ஏற்பட்டது.
ஆளுநரின் இந்த முடிவால் தவெக தொண்டர்கள் அதிருப்தியடைந்தனர். காங்கிரஸ் கட்சியும் ஆளுநரிடம் இருந்து இந்த பதிலை எதிர்பார்க்க வில்லை. இந்நிலையில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தனது எக்ஸ் தளப்பதிவில், “ஆளுநர் மாளிகையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய இடம் சட்டமன்றம் மட்டுமே. இதுகுறித்து உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் தெளிவாக உள்ளன.
தனிப்பெரும் கட்சியான தவெக தலைவர் விஜய் அவர்களை மக்கள் முதலமைச்சர் என்று முடிவு செய்திருக்கிறார்கள்.மக்கள் தீர்ப்பிற்கு குறுக்கே ஆளுநர் நிற்பது சரியல்ல.ஆளுநர் அவர்களுக்கு இந்த அளவிற்கு அரசியலும், அரசியல் சாசன விதிகளும் தெரியும் என்று நம்புகிறேன். பாஜக ஆளுநர் மாளிகை வழியாக அரசியல் செய்வதை உடனே நிறுத்தவேண்டும்.ஆளுநர் அவர்கள் தவெக தலைவர்விஜய் அவர்களை உடனடியாக ஆட்சியமைக்க அழைக்க வேண்டும்
தவெக தலைவர் விஜய் சார்ப்பில் நேற்று அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சென்னை கீரின் வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது. இந்த தகவலை தவெக தரப்பு மறுத்தது. தேசிய ஜனநாயக கட்சி கூட்டணியில் இருக்கும் எந்த கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என தவெக தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் 30 எம்.எல்.ஏக்கள் புதுச்சேரி ரிசார்டில் தங்க வைக்கப்பட்டிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்களுக்கு வித்திட்டுள்ளது
தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் இன்று பதவியேற்பார் என தவெக தொண்டர்கள் மற்றும் அவரது ரசிர்கள் எதிர்பார்த்திருந்தனர். பெரும்பான்மை கிடைக்காததால் தவ.க தலைவர் விஜய் பதவியேற்பு விழாவுக்காக நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வந்த பணிகள் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் விஜய்க்கு ஆதரவாக மெரினாவில் ஜல்லிக்கட்டு சமயத்தில் நடத்தியது போல் பெரிய போராட்டம் நடத்தப்போவதாக தவெக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். விஜய்-க்கு இளைஞர்கள் பெண்கள் மத்தியில் பெரிய அளவில் ஆதரவு உள்ளது. இதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையான சென்னை மெரினா கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]