புதுச்சேரி: புதுச்சேரியில் முதல்வராக ரங்கசாமி கடந்த மாதம்  (மே) 7ந்தேதி பதவி ஒரு மாதம் ஆன நிலையில், தற்போதுதான் பாஜக என்ஆர் காங்கிரஸ் கட்சி இடையேயான லடாய் முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து அமைச்சர்கள் பதவி ஏற்பது  ஜூன் 14 நடைபெறும் என ஆறிவிக்கப்பட்டு உள்ளது.

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு  ஏப்ரல் 6ந்தேதி நடைபெற்று மே 2ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில்,  என்.ஆர்.காங்கிரஸ்  பாஜக கூட்டணி  வற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. இதையடுத்து கடந்த மே 7 ஆம் தேதி ரங்கசாமி முதல்வராக பதவியேற்று கொண்டார். ஆனால் அமைச்சர்களை நியமிப்பதில் கூட்டணிகளுக்கு இடையே இழுபறி நீடித்து வந்தது. சபாநாயகர் பதவி மற்றும் 3 அமைச்சர் பதவிகளை கேட்டு பாஜக தொல்லை கொடுத்து வந்ததாக  கூறப்பட்டது. இதற்கிடையில்,  3 பேர் பாஜக சார்பில் நியமன எம்எல்ஏக்களாக பதவி ஏற்றதும் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனால், மாநிலத்தில் அமைச்சரவை அமைக்க முடியாமல் முதல்வர் ரங்கசாமி முழிபிதுங்கி இருந்தார். இதுதொடர்பாக, பாஜக மேலிட பொறுப்பாளர் எம்.பி.ராஜீவ் சந்திரசேகர் உள்பட பாஜக நிர்வாகிகள் முதல்வர் ரங்கசாமி வீட்டிற்கு சென்று சந்தித்து பேசினார். ஆனால், துணைமுதல்வர் பதவி கிடையாது என்பதில் ரங்கசாமி உறுதியாக இருந்தார்.  இதையடுத்த பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது.  இதில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு இடையே உடன்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, பாஜகவுக்கு உள்துறை அமைச்சர் பதவி உள்பட மேலும் சில பதவிகள் ஒதுக்க முதல்வர் ரங்கசாமி சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அமைச்சரவை பட்டியல் தயாராகி வருவதாகவும், இந்த பட்டியல் ஓரிரு நாளில் புதுச்சேரி துணை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் அளிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து,  ஜூன் 14 ஆம் தேதியன்று அமைச்சர்கள் பதவியேற்பு விழாவானது நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.