சென்னை

பாஜக கூட்டணியில் அமமுக கட்சிக்கு அதிக தொகுதிகள் ஒதுக்க பாஜக தயாராக இருந்ததாக டிடிவி தினகரன் கூறி உள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் அமமுகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.  அக்கட்சிக்கு தேர்தல்  ஆணையம் குக்கர் சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.  நேற்று தொகுதியை பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.  பிறகு டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது தினகரன்,

“அமமுக போட்டியிடுவது எந்தெந்த தொகுதிகள் என்பதை பாஜகவினர் சொன்னால்தான் சரியாக இருக்கும். அவர்களே வெளியிடுவார்கள். எங்கள் கட்சியினரிடம், தேர்தலில் போட்டியிட யார் யாரெல்லாம் விருப்பப்படுகிறார்கள் எனக் கேட்டபோது, 8 முதல் 9 தொகுதிகளில் தான் மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட விருப்பப்பட்டார்கள். அமமுக என்பது பிராந்திய கட்சி. எனவே எங்களது நிர்வாகிகள் தொண்டர்கள் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடத்தான் விரும்புகிறார்கள். 9 தொகுதிகளில் போட்டியிட விருப்பப்பட்டவர்களை அவர்களது பெயர்களோடு பாஜகவிடம் கொடுத்தேன்.

பாஜக எங்களுக்கு முதலில் அதிகமான தொகுதியை ஒதுக்கியது. நான் சொன்னேன், ‘கூட்டணி பலப்பட வேண்டும். அனைத்து கட்சிகளும் வரட்டும்’ என்றேன். கூட்டணிக் கட்சிகள் ஏதும் தொகுதிகள் கேட்டால் விட்டுக்கொடுங்கள் என்றார்கள். நானும் விட்டுத் தருவதாக சொன்னேன். எண்ணிக்கை என்பது முக்கியமல்ல. எங்கள் கூட்டணி வெற்றி பெற வேண்டும். அதற்காக இந்த தேர்தலில் அமமுக தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக உழைக்கும்” 

எனத் தெரிவித்துள்ளார்.