சென்னை,

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக அம்மா அணி சார்பாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ள டிடிவி.தினகரனின் வேட்புமனு ஏற்கப்படுமா? அல்லது தள்ளுபடியாகுமா? என பரபரப்பு நிலவி வருகிறது.

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தலை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.

தற்போது அதிமுக இரண்டு அணியாக இருப்பதால், அதிமுக பெயரையும், இரட்டை இலை சின்னத்தையும் முடக்கி உள்ளது தேர்தல் ஆணையம்.

இந்நிலையில் அதிமுகவின் சசி அணி சார்பாக அவரது அக்காள் மகனும், அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளரும், ஜெயலலிதாவால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவருமான டிடிவி தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் 127 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இன்று வேட்பு மனு பரிசீலனை நடைபெற்று வரும் நிலையில் தினகரன் மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், டி.டி.வி தினகரன் மீது, திமுக சார்பில், திமுக வேட்பாளர் மருதுகணேஷ் தரப்பில் ஒரு மனு தேர்தல் அலுவலர் பிரவீண் நாயாரிடம் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் 60 பக்கம் கொண்ட புகார் மனுவும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அதிமுகவை சேர்ந்த வழக்கறிஞர் ஜோசப் என்பவர்,  டிடிவி.தினகரன் மீது  அன்னிய செலாவணி வழக்கு இருப்பதால் அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தேர்தல் கமிஷனிடம் மனு கொடுத்துள்ளார்.

இதனையடுத்து தினகரன் மீதான வேட்பு மனு மீதான பரிசீலனை  முடிவு அறிவிக்க முடியாமல் தேர்தல் அலுவலர் குழம்பிபோய் உள்ளார். இது தொடர்பாக தலைமை தேர்தல் கமிஷனிடம் கேட்டு முடிவு செய்வார் என கூறப்படுகிறது. இதனால், அவரது மனு குறித்த முடிவு பின்னர் அறிவிக்கப்படும் என தேர்தல் அலுவலர் பிரவீன் நாயர் கூறியுள்ளார்.

இதன் காரணமாக அதிமுக அம்மா கட்சியினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.