பெங்களூரு:

குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் ஜேடிஎஸ்  கூட்டணி அரசு மீது இன்று கர்நாடக சட்ட மன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. குமாரசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுமா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

கர்நாடகா சட்டசபையில் இன்னும் சில மணிநேரங்களில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார் முதல்வர் குமாரசாமி அரசு. அதிருப்தி எம்.எல்.ஏக்களை சமாதானப்படுத்தும் கடைசி கட்ட முயற்சிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சி எம்எல்ஏக்கள் 15 பேர் ராஜினாமா செய்துள்ள தால், ஆட்சி கவிழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆட்சிக்கு ஏற்பட்ட நெருக்கடியை சமாளிப்பது குறித்து காங்கிரஸ் தலைவர்க ளுடன் முதலமைச்சர் குமாரசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். அதிருப்தி எம்எல்ஏக்களின் “தனிப்பட்ட மனக்குறை” தீர்க்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி  உறுதி அளித்துள்ளது.

இதற்கிடையில் ராஜினாமா எம்எல்ஏக்கள் மீது கட்சித்தாவல் தடை சட்டப்படி  நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேவேளையில் அதிருப்தி எம்எல்ஏக்கள், தாங்கள் இன்றைய சபை கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டோம் என்று கூறி மும்பைக்கு சென்றுவிட்டனர்.‘

இந்த நிலையில், அதிருப்தி எம்எல்ஏக்களின் தலைவர் ராமலிங்க ரெட்டிக்கு துணை முதலமைச்சர் பதவி  தருவதாக கூறிச்  சமாதானப்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.  இதையடுத்து, ராஜினாமா செய்த ராமலிங்காரெட்டி உள்பட அவரது ஆதரவாளர்கள் சிலர் மீண்டும் காங்கி ரஸுக்கு திரும்புவதாக தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதேபோல் ஜேடிஎஸ் கட்சியை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏக்களிடம் முதல்வர் குமாரசாமியின் சகோதரர் ரேவண்ணா மன்னிப்பு கோரியிருக்கிறார். இதன் காரணமாக அவர்களும் மனம் மாறி உள்ளதாக கூறப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் குமாரசாமி அரசு தப்புவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

இந்த நிலையில் காங்கிரசுக்கு ஆதரவாக  ரிசார்ட்டில் தங்கி இருந்த  ஶ்ரீமந்த் பாலாசாகேப் பாட்டீல் எம்.எல்.ஏ திடீரென நள்ளிரவு முதல் மாயமாகி உள்ளதால், அங்க மீண்டும் பரபரப்பு நிலவி வருகிறது.  நேற்று இரவு  அவர்களுடன் முதல்வர் குமாரசாமி, துணை முதல்வர் பரமேஸ்வர் ஆலோசனை நடத்தியிருந்தனர். அப்போது முதல் பாட்டீல் எம்.எல்.ஏ.வை காணவில்லை என கூறப்படுகிறது. அவர் எங்கே இருக்கிறார் என காங்கிரஸ் நிர்வாகிகள் விடிய விடிய தேடி வருகின்றனர்.

‘இந்த பரபரப்பான சூழ்நிலையில்,  இன்று காலை 11 மணி அளவில் திட்டமிட்டப்படி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இதில் குமாரசாமி அரசு தப்புவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

கர்நாடக சட்டசபையில் மொத்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 224. இதில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 13 பேர், மற்றும் மதசார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் என 16 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளதால் சட்டசபையின் பலம் 208 ஆக குறைந்துள்ளது.

இதனால் அரசின் பெரும்பான்மைக்கு 105 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை. ஆனால் தற்போது காங்கிரஸ்-மஜத கூட்டணியில் 100 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். இதனால் ஆட்சி கவிழும் ஆபத்து அதிகம் உள்ளது.

இந்த நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ ராமலிங்கரெட்டி மற்றும் அவரது தீவிர ஆதரவாளர்கள் சிலர்  மனம் மாறி உள்ளதால், அவர்கள் இன்று காலை சபாநாயகரை சந்தித்து தங்களது ராஜினாமா கடிதங்களை வாபஸ் பெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அப்படிய ஒரு சம்பவம் நடைபெற்றால், குமாரசாமி அரசு தப்பிவிடும் என்பதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை.

ராஜினாமா கொடுத்துள்ள எம்எல்ஏக்களின் கடிதம் மீது, சபாநாயகர் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.